கோலாலம்பூர்- அனைவருக்கும் ஒரே (பொது) கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது தேசிய முன்னணியின் கொள்கை அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
ஒரே கல்வித் திட்டத்திற்கு ஆதரவாக, நாட்டில் உள்ள சீன தாய்மொழிப் பள்ளிகளை மூட வேண்டும் என குறிப்பிட்ட தரப்பினர் வலியுறுத்தி வந்தாலும், அது தேசிய முன்னணியின் கொள்கை அல்ல என்றும், தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் என்றும் பிரதமர் நஜிப் கூறினார்.
“இதை நான் முடிவு செய்யவில்லை. நம் நாட்டின் முன்னோர்கள் எடுத்த முடிவு” என்று மசீசவின் 62ஆவது ஆண்டு கூட்டத்தை தொடக்கி வைத்தபோது நஜிப் தெரிவித்தார்.
பல்லின கலாச்சார மற்றும் பல்லின மத கொள்கைகளை தேசிய முன்னணி ஆதரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், அனைத்துவித தீவிரவாதத்தையும் எதிர்ப்பதாகக் கூறினார்.
“கூட்டணி தொடர்பாக கருத்துக்களை வெளியிடுவதில் மசீச மென்மையான போக்கை கடைபிடிக்கிறது. அதற்கு என் பாராட்டுகள். வெளியிடங்களில் கூச்சலிடுவதால் நமது கருத்துக்கள் பிறரால் கேட்கப்படுவதாக அர்த்தமாகிவிடாது” என்றார் நஜிப்.
அண்மைய பேரணிகளைக் குறிப்பிட்டு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.