யாரேனும் ஒருவர் இது குறித்து பேசாவிட்டால், அனைத்து தவறான செயல்பாடுகளில் இருந்தும் அரசு தப்பித்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“நாட்டின் மூத்த குடிமக்களாக, நாட்டின் அரசியலுடன் நெருக்கமான தொடர்புடைய எங்களைப் போன்றவர்கள், தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்தாக வேண்டும் எனக் கருதுகிறோம். அரசுக்கெதிரான கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுபவர்கள் சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் நானும் அச்சட்டத்தின் கீழ் கைதாக வாய்ப்புள்ளது. ஏனெனில் பிரதமருக்கு எதிராக எதைப் பேசினாலும் அது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான முயற்சி என்கிறார்கள்.
“ஓர் அரசாங்கத்தை கவிழ்ப்பது ஜனநாயகத்தில் மக்களுக்கு உள்ள உரிமை. என் மீதோ அல்லது எங்களில் ஒருவர் மீதோ அவர்கள் நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நாட்டு நலன்களில் அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை என்பது தொடர்பில் யாரேனும் ஒருவர் பயமின்றி குரல் எழுப்பி அதிருப்தியையும் ஆத்திரத்தையும் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தங்களைப் பற்றி கருத்துத் தெரிவிப்பவர்கள் மீதெல்லாம் அடக்குமுறையைக் கையாண்டு வரும் அரசாங்கம், மகாதீர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம் இன்றும் அம்னோவில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் தான் என்று கூறப்படுகின்றது. அவ்வாறு மகாதீர் கைதானால் அம்னோ இரண்டாகப் பிளவுபடும் வாய்ப்பும் உள்ளதாகத் தெரிவித்துள்ளனர் அரசியல் ஆர்வலர்கள்.