சென்னை – குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் காமுகர்களின் ஆண்மையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் சட்டத்தை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
கடந்த 2011–ம் ஆண்டு, இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்த ஒருவர், தமிழகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனை, உயர் கல்வி அளிப்பதாகக் கூறி டெல்லி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி உள்ளார். அதன் பின்னர் அவர் பிரிட்டன் சென்றுவிட்டார்.
இந்நிலையில், அச்சிறுவன் ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற நிறுவனத்தின் மூலம் அந்த இங்கிலாந்து நபர் மீது வழக்கு தொடர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு எதிராக கீழ் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி அந்த நபர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்தினால், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வெகுவாக குறையும்” என்று கூறியுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அந்த இங்கிலாந்துக்காரரின் மனுவை தள்ளுபடி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
பாலியல் குற்றங்களுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றமே முக்கிய முடிவை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது என குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.