Home Featured கலையுலகம் யார் அந்த முத்துக்குமார்? ஆனந்தி தேடிய சாவி கிடைத்ததா?

யார் அந்த முத்துக்குமார்? ஆனந்தி தேடிய சாவி கிடைத்ததா?

502
0
SHARE
Ad

MKWகோலாலம்பூர் – யார் அந்த முத்துக்குமார்? என்ற கேள்வியுடன் கதை முழுவதும் நம்மைப் பயணிக்க வைத்திருக்கும் ஒரு படம் தான் ‘முத்துக்குமார் வாண்டட்’.

தமிழகத்தின் முன்னணிக் கதாநாயகர்கள் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியாகி தற்போது திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வரும் நிலையில், மலேசிய ரசிகர்களைத் திருப்திபடுத்தும் நோக்கில் துணிச்சலுடன் களமிறங்கியிருக்கிறது இப்படம்.

எம்.பத்மநாபன் இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக மலேசியாவைச் சேர்ந்த எஸ்.கே.சரண் நஷிரா, ஹரிதாஸ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் நிழல்கள் ரவி, ஃபாத்திமா பாபு, வி.சி.ஜெயமணி உள்ளிட்ட பிரபல தமிழகக் கலைஞர்களும் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

படத்தின் ஒளிப்பதிவை எம்.ஜி குமாரும், படத்தொகுப்பை மலேசிய இயக்குநரும், படத்தொகுப்பாளருமான பிரேம்நாத்தும் செய்துள்ளனர்.

கதைச் சுருக்கம்

சிறுவயது முதல் தனக்கு பிறந்தநாள் பரிசளித்து வரும் முகம் தெரியாத முத்துக்குமார் என்பவரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசை கொள்கிறாள் கதாநாயகி ஆனந்தி. பெரியவர்கள் கலந்து பேசி அவளுக்கு ஒருவரை திருமணம் செய்து வைக்க நினைக்கும் நேரத்தில் முத்துக்குமாரிடமிருந்து ஒரு சிறிய பெட்டகம் வருகிறது அவளுக்கு. அதன் சாவியை தன்னை சந்தித்து பெற்றுக் கொள்ளுமாறு அதில் ஒரு கடிதம் இருக்கிறது. கதாநாயகி முத்துக்குமாரை சந்தித்தாரா? சாவி கிடைத்ததா? அவளுக்கு ஏற்பட்ட ஆச்சர்யம் என்ன? என்பது தான் படத்தின் முடிவு.

ரசித்தவை

கதாநாயகன் சரண் புதுமுகம் என்றாலும் கூட இயல்பாக நடித்திருக்கிறார். தேவையான இடத்தில் நேர்த்தியாக சைகைகளையும், முகபாவணைகளையும் வெளிப்படுத்துகிறார்.

நடிகை நஷிரா கதாப்பாத்திரத்திற்கு சரியான தேர்வு. குடும்பப்பாங்கான தோற்றத்திற்கும், நாகரீக தோற்றத்திற்கும் அவரது முகவெட்டு சிறப்பாகப் பொருந்துகிறது. நடிப்பிலும் பல இடங்களில் ரசிக்க வைக்கிறார்.

மறவனில் கரடுமுரடான தோற்றத்துடன் மிரட்டிய ஹரிதாஸ், இதில் மிக அழகான தோற்றத்துடன் இளமையாக நடித்திருக்கிறார்.இந்த மூன்று கதாப்பாத்திரங்கள் வரும் காட்சிகள் கதையோடு நம்மை ஒன்ற வைக்கின்றன.

சுந்தரா இசையில், கோக்கோ நந்தா வரிகளில் பாடல்கள் அனைத்தும் சிறந்த தரத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ‘ஆதாம் எனக்கெனவே’ பாடல் நரேஷ் ஐயரின் குரலில் மனதை சுண்டி இழுக்கிறது. பாடல்கள் அனைத்தும் படத்திற்கும், கதையோட்டத்திற்கும் பக்கபலம் சேர்த்துள்ளன.

கோக்கோ நந்தா, ரோபோ சங்கர் ஆகியோர் வரும் அந்தப் பாடல் காட்சி ரசிக்க வைத்தது.

முன்பாதியில் ஏற்படும் தொய்வு 

சென்னையில் நடக்கும் முன்பாதிக் கதை சற்றே தொய்வுடன் நகர்கிறது. கதாநாயகயின் தாய் தந்தையாக நிழல்கள் ரவியும், பாத்திமாவையும் தேர்வு செய்திருப்பது இயக்குநரின் சாதுர்யம் . காரணம் பார்த்துப் பழகிய முகமென்பதால் அவர்களின் நடிப்பு வித்தியாசமாகத் தெரியவில்லை. இல்லையென்றால் நிச்சயம் போரடித்திருக்கும். கதாநாயகி மலேசியாவிற்கு வரும் வரை தொலைக்காட்சி சீரியல் பார்ப்பது போன்ற உணர்வை தருகின்றது.

முன்பாதி சென்னையில் நடக்கும் கதையில், சம்பந்தமே இல்லாமல் கதாநாயகியின் மாமன் கதாப்பாத்திரம் ‘பியாசா தானே’ போன்ற மலாய் கலந்த தமிழில் வசனங்கள் பேசுவதைத் தவிர்த்திருக்கலாம்.

பின்னணி இசையைப் பொறுத்தவரையில் அவ்வளவாக ஈர்க்கவில்லை. இன்னும் கொஞ்சம் புதுமை சேர்த்திருக்கலாம். கதாநாயகியின் காதலை சொல்லும் காட்சிகளில் வரும் பின்னணி இசை வேறு ஒரு பாட்டில் எங்கேயோ கேட்ட உணர்வைத் தருகின்றது.

வசனங்களில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். முத்துக்குமார் மீது கதாநாயகிக்கு ஏற்படும் ஈர்ப்பு, அவரைப் பார்க்க வேண்டுமென அவளது தவிப்பு போன்ற இடங்களில் கூர்மையான வசனங்கள் பேசியிருந்தால், நம்மால் அவளது காதலை ரசித்திருக்க முடியும்.

யாருக்கான படம்?

‘முத்துக்குமார் வாண்டட்’ திரைப்படத்தைப் பொறுத்தவரையில் முன்னணி கதாப்பாத்திரங்களில் புதுமுகங்களை வைத்து ஒரு அழகிய காதல் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

தற்போது, ‘பத்து எண்றதுக்குள்ள’, ‘நானும் ரௌடி தான்’ என பிரபலக் கதாநாயகர்களின் இரண்டு திரைப்படங்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்திருந்தாலும் கூட, மலேசிய திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பவர்களுக்கு ‘முத்துக்குமார் வாண்டட்’ ஒரு புதிய அனுபவத்தைக் கொடுக்கும்.

-ஃபீனிக்ஸ்தாசன்