சென்னை : இங்கிலாந்திலிருந்து ரால்ஸ் ராய்ஸ் ரக சொகுசு கார் ஒன்றை இறக்குமதி செய்திருக்கும் நடிகர் விஜய் அதன் தொடர்பில் நுழைவு வரி விதிக்கத் தடை கோரி நீதிமன்றத்தில் மனு ஒன்றைச் செய்திருந்தார்.
அதன் தொடர்பில் சென்னை உயர் நீதிமன்றம் அவரின் மனுவை நிராகரித்ததோடு, அவருக்கு 1 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.
நடிகர்கள் சமூகத்தில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.
நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது மாறாக உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என இந்த மனுவை நிராகரித்த உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கருத்துரைத்திருக்கிறார். சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்யக் கூடாது என்றும் நீதிபதி மேலும் தனது தீர்ப்பில் கூறியிருக்கிறார்.
வரி விதிப்பு என்பது நன்கொடையல்ல கட்டாய பங்களிப்பு என்றும் நீதிபதி சுட்டிக் காட்டியிருக்கிறார்.
வழக்கு தன் பார்வைக்கு வந்த பின்னரே அதில் சம்பந்தப்பட்டிருப்பது நடிகர் விஜய் என்பது தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் நீதிபதி தெரிவித்திருக்கிறார்.