Home Featured கலையுலகம் டிஎச்ஆர் ராகா: தெரிந்த குரல்கள் – தெரியாத முகங்கள் (தொகுப்பு 1)

டிஎச்ஆர் ராகா: தெரிந்த குரல்கள் – தெரியாத முகங்கள் (தொகுப்பு 1)

930
0
SHARE
Ad

THR RAAGA-Deepavaliகோலாலம்பூர் – நாட்டின் முதன்மை தமிழ் வானொலி நிலையமாக மலேசியத் தமிழ் இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட வானொலி நிலையம் டிஎச்ஆர் ராகா.

அன்றாடம் டிஎச்ஆர் வானொலியைக் கேட்டு மகிழும் இலட்சக்கணக்கான இரசிகர்களுக்கு வானொலி அறிவிப்பாளர்களின் பெயர்களும், குரல் தொனியும் அப்படியே அவர்களின் மனங்களில் ஆழப் பதிந்து விட்டன.

ஆனால் அவர்களின் முகங்கள்?

#TamilSchoolmychoice

ஒரு சில அறிவிப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் பலரது முகங்கள் இரசிகர்களுக்கு இன்னும் தெரியாத முகங்களே!

டிஎச்ஆர் வானொலியின் பின்னணியில் உழைக்கும் சிலரையும், சில அறிவிப்பாளர்களையும் அவர்களின் தீபாவளி வாழ்த்துகள், கருத்துகளோடு – அவர்களின் தெரியாத முகங்களோடு சந்திப்போமா?

மோகனதாஸ் முனியாண்டி – செய்தியாசிரியர், Astro Radio வானொலி செய்திப் பிரிவு

THR RAAGA - Mohanadas Muniandy-1டிஎச்ஆர் ராகாவின் சில நிமிடச் செய்திகளுக்குள் உள்நாடு, வெளிநாடுகளின் முக்கியத் தகவல்களை உள்ளடக்கித் தருவது அதன் சிறப்பு அம்சம்.

அதற்காக தினமும் பாடுபடுபவர் அதன் செய்தியாசிரியர் மோகனதாஸ் முனியாண்டி.

“இந்த வருஷம் பரபரப்பான தீபாவளின்னு சொல்லனும். வேலை பரபரப்புல தீபாவளிக்கு முன் கூட்டியே எதுவும் தயாரிக்கல. ஷாப்பிங், பலகாரம் எல்லாமே கடைசி நேரத்தில் தான்! கடைசி நேரமானாலும் களைக் கட்டறது தானே முக்கியம். கடந்தாண்டைப் போல் இவ்வாண்டும் ஒரு வார விடுமுறை என்பதால் சொந்த ஊரான ஜோகூர் ச்சாஆ திரும்பி குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடலாம்னு இருக்கோம். வேலைப் பளுவால அடிக்கடி ஊர் திரும்ப முடியாம போய்டுது. அதனால் வருஷத்துக்கு ஒரு முறை இப்படி கிடைக்கற வாய்ப்பை நழுவ விடறதில்லை.” என்கிறார் மோகனதாஸ்.

“வருஷம் முழுவதும் இட்லி தோசை சாப்பிட்டா கூடா, தீபாவளி அன்று காலையிலேயே கோழிக் கறியுடன் சாப்பிடும் போது கிடைக்குற சுகமே தனி! இந்த வருஷம் அதுக்காகவே ஆவலாய் காத்திருக்கேன். அனைத்து மலேசியர்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். ஊருக்குத் திரும்புறவங்க்க பாதுகாப்பாக பயணம் செய்யுங்க! ராகா செய்தியை கேட்க மறக்காதீங்க…” என்ற வேண்டுகோளோடு தீபாவளி வாழ்த்து சொல்கின்றார் மோகனதாஸ்.

டி.எச்.ஆர் ராகாவின் செய்தி வாசிப்பாளர்கள்

THR RAAGA NEWS READERSஉட்கார்ந்திருப்பவர் : சவுரியம்மாள் ராயப்பன்
நிற்பவர்கள் ( இடமிருந்து வலம் ) : ஸ்ரீ குமரன் முனுசாமி, தனலெட்சுமி புவனேந்திரன், சுகந்தமலர் முனியாண்டி

செய்தியைத் தயாரிப்பது ஒரு சவால் என்றால், அந்த செய்திகளை, கொடுக்கப்பட்ட நிமிடங்களுக்குள், பிழையின்றி வாசித்து, இனிய கம்பீரக் குரலில் இரசிகர்களின் செவிகளுக்குக் கொண்டு சென்று சேர்ப்பது இன்னொரு சவால்.

அந்த சவால் மிக்க  பணியில் ஈடுபடும் டிஎச்ஆர் செய்தி வாசிப்பாளர்கள் சிலரைத்தான் மேலே பார்க்கிறீர்கள். இனி அவர்களின் தீபாவளி வாழ்த்துகள் – கருத்துகளைக் கேட்போமா?

சுகந்தமலர் முனியாண்டி – செய்தி வாசிப்பாளர்

“இந்த முறை தீபாவளிக்கு 4 நாட்கள் விடுமுறையோடு சேர்த்து வார இறுதி விடுமுறையும் வருவதால் ஒரே கொண்டாட்டம் தான். வழக்கம் போல் ஜோகூர் சிகாமாட்டில் உள்ள மாமியார் வீட்டுக்குப் போயிருவோம். என்னோட ரெண்டு பிள்ளைங்களுக்கும் தான் உண்மையிலே கொண்டாட்டமா இருக்கும். பாட்டி வீடாச்சே! சொல்லனுமா. பிறகு எங்க அம்மா வீட்டுக்குப் போய் சகோதர சகோதரிகளுடன் கொண்டாடுவோம். ஒவ்வொரு வருஷமும் ரெண்டு பேர் வீட்டுக்கும் போக முடிவதால், எனக்கும் என் கணவருக்கும் இதில் சண்டையே வர்றதில்லை” என தன் குடும்ப சந்தோஷத்தையும் பகிர்ந்து கொள்கின்றார் சுகந்தமலர்.

“டி.எச்.ஆர் ராகாவுக்கு செய்தி வாசிக்க வந்த முதல் வருஷம் தான் எனக்கு மறக்க முடியாத தீபாவளினு சொல்லனும். பொது விடுமுறைக்கு கடைசி செய்தி எதுன்ற குழப்பத்திலே நானும் எங்க செய்தியாசியர் மோகனதாஸ் முனியாண்டியும், இரவு 7 மணி வரைக்கும் அலுவலகத்துல இருந்து செய்தி வாசிச்சிட்டு போனத மறக்க முடியாது. எல்லாருமே போய்ட்டாங்க வீட்டுக்கு. ஆனால் என்ன நடக்குதுன்னே தெரியாம நாங்க ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் வேலை செஞ்சுட்டு போனோம். மறு நாள் தான் தெரியும், நாங்க அவ்ளோ நேரம் இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. மதியம் வாக்கிலேயே வீட்டுக்கு போயிருக்கலாமென்றூ. என்ன பன்றது தீபாவளியை அலுவலகத்திலேயே கொண்டாட வேண்டியதா போச்சு.. ராகா செய்தியை மறவாமல் கேட்டு வரும் நேயர்களும், அனைத்து மலேசியர்களுக்கும் எனது இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகள்! ” என்று வாழ்த்துகின்றார் சுகந்தமலர்.

தனலெட்சுமி புவனேந்திரன் – செய்தி வாசிப்பாளர்

“இந்த வருஷம் எங்கேயும் போகல. வீட்டிலேதான் தீபாவளி! எனக்கு 3 நாட்கள் விடுமுறைதான் ஆனால் கணவருக்கு வேலை. என்ன ஸ்பெஷல்னு கேட்டா, என்னோட ரெண்டு குட்டிகளும் கொஞ்சம் வளர்த்துட்டாங்க. இந்த வருஷம் பெரியவள் அவளோட உடுப்பை அவளே தேர்வு செஞ்சிகிட்டா. தீபாவளின்னா ஏதோ ஒரு சந்தோஷமான விஷயமுன்னு அவங்களுக்கு புரியுது. அப்போ இந்த வருஷம் ஒரே குதூகலம் தான்” என்று கூறும் தனலெட்சுமி, தனது மறக்க முடியாத தீபாவளி அனுபவங்களை பின்வருமாறு பகிர்ந்து கொள்கின்றார்.

“மறக்க முடியாத தீபாவளி அனுபவம்னா , என் அம்மா, அப்பா இருந்த போது… என் அம்மா எனக்காக ஆவி பறக்க இட்லி சுட்டுக் கொடுப்பாங்க. வீடே சாம்பிராணி வாசத்துலே தெய்வீகமாக இருக்கும். என் பெற்றோர் என்னோடு இருந்த போது நான் கொண்டாடிய ஒவ்வோர் தீபாவளியும் எனக்கு மறக்க முடியாத தீபாவளி தான். இப்போ ரெண்டு பேருமே இல்ல. இருந்தாலும் நல்ல கணவர், அழகான குழந்தைகள் என இப்ப தீபாவளி , சுகமான சுமையைத் தரும் தீபாவளியா இருக்கு”

“செய்திப் பிரிவுல எப்பவுமே கலகலப்புக்கு பஞ்சமே இருக்காது. தீபாவளி சமயம்னு கொஞ்சம் கூடுதல் அழகா உடுத்திட்டு வந்துட்டா போதும். மற்ற இன நண்பர்கள் கலாய்ப்புக்கு அளவே இருக்காது.. எவ்வளவு பலகாரம் எடுத்துட்டு வந்தாலும், பஞ்சா பறந்துடும். என்னை தெரிஞ்சவங்க, என் குரலை மட்டுமே கேட்டவங்க என எல்லாருக்கும் என் சார்பாகவும், என் குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன்” என வாழ்த்து கூறுகின்றார் தனலெட்சுமி.

சவுரியம்மாள் ராயப்பன் – செய்தி வாசிப்பாளர்

“இந்த வருஷம் தீபாவளிக்கு நான் அலுவலகத்துலதான் இருப்பேன்….இருந்தாலும் வேல நேரம் முடிஞ்சதும் நண்பர்கள் வீடுகளுக்கு கிளம்பிடுவேன். நான் கிறிஸ்மஸ்தான் கொண்டாடுறேன்.. இருந்தாலும் ஒவ்வொரு வருஷமும் நண்பர்களோட சேர்ந்து தீபாவளி குதுகலத்துல கலந்துக்க தவறியதே இல்லைங்க” என்கிறார் சவுரியம்மாள்.

“இந்த வருஷம்னு இல்ல..எப்போதுமே தீபாவளின்னு சொன்னவுடனேயே என் நினைவுக்கு வருவது கைமணக்கும் முறுக்குதாங்க! சாப்பிட சாப்பிட திகட்டாத ஒரு பலகாரம்.. புத்தாடை உடுத்துறது, நண்பர்கள் வீட்டுக்கு போறது அப்படின்னு ஏகப்பட்ட விஷேங்கள் நிறைந்த இந்த தீபாவளிய நீங்களும் அனுபவிச்சு கொண்டாடுவீங்கன்னு நான் நம்புறேன்…நான் கிறிஸ்மஸ் கொண்டாடுறதுனால எனக்கு எல்லா தீபாவளியுமே மறக்க முடியாத அனுபவம்தாங்க” என்று கூறும் சவுரியம்மாள்,

“பட்டியல் ரொம்ப நீளம்தான்…இருந்தாலும் சுருக்கமா சொல்லிடுறேன்..உலகத்துல எந்த மூல முடுக்கில இருந்தாலும் சரி.. உங்க எல்லாருக்குமே எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! அதவிட ஸ்பெஷலா…ஆதரவற்று இருக்ககூடிய குழந்தைகள், பெரியவங்க எல்லாருக்கும் என்னோட தீபாவளி வாழ்த்துகள் (இவங்களுக்கும் நம்மால முடிஞ்ச அளவுக்கு உதவி செஞ்சு இந்த வருஷச தீபாவளிய அசத்துவோம் வாங்க…!)”

ஸ்ரீ குமரன் முனுசாமி – செய்தி வாசிப்பாளர்

“இந்த வருஷம், தீபாவளி முதல் நாள் மட்டும் தான் விடுமுறை. மறுநாள் வேலை. இருந்தாலும், அந்த ஒரு நாளே சிறப்பா கொண்டாடனும். பேராக்கிலுள்ள, செமோர்தான் என் ஊரு. வீட்ல கண்டிப்பா என்னுடைய வருகைகாக காத்திருப்பாங்க. ஒரே செல்லப் பையனாச்சே. இது, ஆஸ்ட்ரோ வானொலியில் வேலைக்குச் சேர்ந்து முதல் முதலாக கொண்டாடவிருக்கும் தீபாவளி. கிட்டதட்ட தல தீபாவளி மாதிரி. கண்டிப்பா ஸ்பெஷலான தீபாவளிதான்” என்று கூறி மகிழும் ஸ்ரீகுமரன், தன் சின்ன வயது தீபாவளி அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றார்.

“மறக்க முடியாத தீபாவளினா, கண்டிப்பா நான் சின்ன வயசுல கொண்டாடின அந்த தீபாவளிகள் தான். எந்த கவலையும் கிடையாது, ஜாலியா பண்டிகையை கொண்டாடுவோம். இப்போ செலவ நினைச்சாலே தலை சுற்றுது. ஹாஹா.. ஆனாலும் என்ன பண்ண முடியும் வருஷத்துக்கு ஒரு நாள், குடும்பத்தோட சந்தோஷமா கொண்டாடறதுலால அத சகித்து கொள்ள வேண்டியது தான். மக்களே என்னதான் இருந்தாலும், விரலுக்கு ஏத்த வீக்கம், வரவுக்கு ஏற்ற செலவு செய்யுங்க.. என்னோட அப்பா அம்மா அப்புறம் என்னோட ஐந்து அன்பு அக்காமார்கள் அவர்களோட குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், ராகா குடும்பத்தினர், ஆஸ்ட்ரோ குடும்பத்தினர் இப்படி நிறைய பேருக்கு என்னோட தீபாவளி வாழ்த்துகளை நான் தெரிவிச்சுக்கிறேன்.” என்று வாழ்த்து கூறுகின்றார் ஸ்ரீகுமரன்.

-செல்லியல் தொகுப்பு