யங்கோன் – மியான்மர் மக்களின் ஏறக்குறைய 25 ஆண்டுகால ஏக்கம் நேற்று நிறைவேறி உள்ளது. ஜனநாயக முறைப்படி நேற்று அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர்.
ஜனநாயகத்தை வலியுறுத்தாமல், இராணுவ ஆட்சியாளர்களைக் கொண்டு இத்தனை ஆண்டுகளாக மியான்மரில் ஆட்சி செய்து வந்த ஐக்கிய சகோதரத்துவ மேம்பாட்டுக் கட்சி (யு.எஸ்.டி.பி) உலக நாடுகளின் வற்புறுத்தல் காரணமாக தேர்தலுக்கு ஒப்புக்கொண்டது. மேலும் பல வருடங்களாக வீட்டுச் சிறையில் வைத்து இருந்த ஆங் சாங் சூகீயையும் விடுத்தலை செய்தது. சிறைவாசத்தில் இருந்து வெளிவந்த சூகீ, தனது ஜனநாயக தேசியக் கட்சி (என்.எல்.டி) ஆதரவாளர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட்டார்.
இதன் படி நேற்று நடந்த வாக்குப்பதிவில் 80 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இருந்த ஆட்சியாளர்களின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாகவும், சூகீ மீது இருக்கும் நன்மதிப்பு காரணமாகவும் இம்முறை என்.எல்.டி கட்சி கண்டிப்பாக பெருவாரியான வெற்றி பெறுவர் என்று மியான்மர் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.