புது டெல்லி – காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, ஒரு பிரிட்டன் பிரஜை என்ற அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை தெரிவித்துள்ள சுப்பிரமணிய சுவாமி, அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தலைநகரான டெல்லியில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் இந்த குற்றச்சாட்டை பகிரங்கப்படுத்தினார். பிரிட்டனைச் சேர்ந்த ‘பேக்காப்ஸ் லிமிட்டட்’ (Backops Limited) என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனராக ராகுல் காந்தி உள்ளதாகவும், அந்நிறுவனத்தின் ஆண்டறிக்கையில், ராகுல் காந்தி தன்னை ஒரு பிரிட்டன் பிரஜை எனக் குறிப்பிட்டு, பிரிட்டன் பகுதியில் உள்ள ஒரு முகவரியை கூறியுள்ளதாகவும் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், தாம் இதுகுறித்து பிரதமர் மோடிக்கு அனைத்து ஆதாரங்களுடன் கடிதம் ஒன்றை எழுதி உள்ளதாகவும், அந்த கடித்தத்தில், இந்திய அரசியல் சாசனம், பிரிவு 9-ன் படி, ராகுல் காந்தி சட்டவிரோதமாக இங்கிலாந்து குடியுரிமை பெற்று இருப்பதால், அவரது நாடாளுமன்ற உறுப்பினர் (எம்.பி) பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுப்பிரமணிய சுவாமியின் இந்த குற்றச்சாட்டால் டெல்லி அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.