Home Featured தமிழ் நாடு ஸ்டாலின் மனைவியின் மனமாற்றம்: திமுகவில் மீண்டும் அழகிரி?

ஸ்டாலின் மனைவியின் மனமாற்றம்: திமுகவில் மீண்டும் அழகிரி?

887
0
SHARE
Ad

stalinசென்னை- தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மு.க.அழகிரி மீண்டும் திமுகவில் இணைவாரா? என்ற கேள்விக்கான விடை தெரியாமல் அக்கட்சியினர் தவித்து வருகின்றனர். இந்நிலையில் அழகிரியை மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை திமுக தலைமை தொடங்கிவிட்டதாக ஊடகங்களில் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மு.க.அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டது முதலே ஸ்டாலின் சுறுசுறுப்பாகிவிட்டார். பெரும்பாலான மாவட்டத் தலைவர்களை தன்வசம் இழுத்துக் கொண்ட அவர், அழகிரி கோலோச்சிய மதுரை திமுகவையும் தன்வசப் படுத்தியுள்ளார்.

இதனால் வேறு வழியின்றி கிட்டத்தட்ட அரசியல் துறவறம் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார் அழகிரி. எனினும் கடந்த சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் திமுகவுக்கு கிடைத்த பலத்த அடி காரணமாக ஸ்டாலினுக்கு பின்னடைவு ஏற்பட்டது.stalin---2nd-son-of-mk_011113064511

#TamilSchoolmychoice

“ஒருவேளை அழகிரி இருந்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தளவு பெரிய தோல்வி கிடைத்திருக்காது” என திமுக நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக முணுமுணுத்தனர். இதன் காரணமாக சிலர் கட்சியை விட்டே வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க ஸ்டாலின் மனைவி துர்கா கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல் வெளியானது. தனது கணவர் குறித்து அழகிரி கட்சியினரிடம் மிக மோசமாக விமர்சித்ததே துர்கா ஸ்டாலினின் கோபத்திற்குக் காரணம் என்றும் கூறப்பட்டது.

இத்தகைய சூழ்நிலையில் தேர்தல் கூட்டணிக்கு முன்பாக குடும்பக் கூட்டணியை முன்பு போல் பலமாக்க வேண்டும் என ஆன்மீக பிரமுகர் ஒருவர் துர்காவுக்கு அறிவுரை கூறியதாகவும், இதையடுத்து துர்காவின் நிலைபாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதையடுத்து அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ள ஸ்டாலின் குடும்பத்தினர் சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள திமுக தலைவர், அழகிரியுடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் துரைமுருகனை பணித்திருப்பதாகத் தெரிகிறது.

ஜனவரி 30ஆம் தேதி அழகிரி தனது பிறந்த நாளைக் கொண்டாடும் போது அவர் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படுவது குறித்தும், அவருக்கு கட்சியில் வழங்கப்படவுள்ள பதவி குறித்தும் திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் திமுகவினர் மற்றும் அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில் உற்சாக அலைகளைக் காண முடிகிறது.