டெல்லி- சட்டவிரோத தொலைபேசி இணைப்பக வழக்கு தொடர்பில் தயாநிதி மாறனிடம் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ)அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை ஏறத்தாழ ஆறு மணி நேரம் விசாரணை நடத்தினர். அவரிடம் மேலும் ஐந்து நாட்கள் விசாரணை நீடிக்கும் எனத் தெரிகிறது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன் பதவி வகித்தபோது தனது வீட்டிற்கு நூற்றுக்கணக்கான தொலைபேசி இணைப்புகளை பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து முறைகேடாக பெற்றதாகவும், அதைக் கொண்டு தனது வீட்டிலேயே சட்டவிரோதமாக தொலைபேசி இணைப்பகம் ஒன்றை நடத்தியதாகவும் புகார் எழுந்தது.
மேலும் இந்த இணைப்புகள் அனைத்தையும் தனது சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டிவியின் ஒளிபரப்பு ஏற்பாடுகளுக்கு பயன்படுத்தினார் என்றும், இதனால் அரசுக்குப் பெருந்தொகை இழப்பு ஏற்பட்டது என்றும் சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக தயாநிதி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவரைக் கைது செய்ய சிபிஐ நடவடிக்கை மேற்கொண்டது. எனினும் உயர்நீதிமன்றத்தை அணுகி முன்பிணை பெற்றார் தயாநிதி. இதனால் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்தார்.
இதையடுத்து அவரது முன்பிணையை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது சிபிஐ. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தயாநிதி மாறனை கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.
எனினும் சிபிஐ அவரை விசாரிக்க கோருவதால், தயாநிதி மாறன் 6 நாட்கள் நேரில் முன்னிலையாக உத்தரவிட்டது. அப்போது அவரிடம் சிபிஐ அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக கேள்விகள் எழுப்பி பதில்களை எழுத்துப்பூர்வமாகவே பெற வேண்டும் என்றும், அந்தப் பதில்களை உச்சநீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் அடிப்படையில் திங்கட்கிழமை காலை சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்காக தயாநிதி மாறன் முன்னிலையானார். அப்போது அவரிடம் சுமார் 6 மணி நேரம் தொடர்ச்சியாக கிடுக்குப்பிடி விசாரணை நடத்தப்பட்டது.
தயாநிதியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தயாநிதி மீதான விசாரணை இன்றும் தொடரும்.