புதுடில்லி – நேற்று சனிக்கிழமை மேக்சிஸ்-ஏர்செல் தொடர்பான வழக்கில் புதுடில்லி சிறப்பு நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோருக்கு முன் பிணை (ஜாமீன்) வழங்குவதா என்ற தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
டெல்லி சிறப்பு நீதிமன்றம் 2-ஜி வழக்குகளை விசாரிக்க மட்டுமே அதிகாரம் படைத்தது – மாறாக, தங்களின் பிணை விண்ணப்பம் மீதான விசாரணைகளை நடத்த அதற்கு அதிகாரம் இல்லை என மாறன் சகோதரர்களின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
ஆனால், மாறன் சகோதரர்களுக்கு பிணை வழங்கப்படக்கூடாது என வாதிட்ட அரசாங்க அமுலாக்கப் பிரிவு, அவ்வாறு அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டால் அவர்கள் சாட்சிகளைக் கலைத்து விடுவார்கள், விசாரணைகளுக்கு இடையூறாக இருப்பார்கள் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீதிபதி ஓ.பி.சைனி பிணை விண்ணப்பம் மீதான தீர்ப்பை எதிர்வரும் செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ தொடுத்துள்ள இந்த வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு எதிராக போதுமான அம்சங்கள் இருப்பதால் வழக்கைத் தான் தொடர்ந்து நடத்தப் போவதாகவும் நீதிபதி சைனி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் மேக்சிஸ் உரிமையாளரான மலேசிய கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நிறுவனத்தின் முதல் நிலை அதிகாரி ரால்ப் மார்ஷல் ஆகியோர் மீது கைது ஆணையை இந்திய அரசாங்கத்தின் அமுலாக்கப் பிரிவு பிறப்பித்துள்ளது.