கோலாலம்பூர்- தம்மை ஒரு கோழை என்று காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கர் கூறியிருப்பது முற்றிலும் தவறானதொரு கூற்று என்று படுகொலை செய்யப்பட்ட அரசு துணை வழக்கறிஞர் கெவின் மொராயிசின் இளைய சகோதரர் சார்ல்ஸ் மொராயிஸ் (படம்) தெரிவித்துள்ளார்.
தாம் நாட்டை விட்டு எங்கும் தப்பியோடவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், ஐஜிபி காலிட் அபுபாக்கர் மீது அவதூறு வழக்கு தொடர்வது குறித்து தாம் பரிசீலித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தற்போது அட்லாண்டா நகரிலுள்ள சார்ல்ஸ், அங்கிருந்தபடியே தொலைபேசி வழி ‘ஸ்டார்’ பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார்.
“எனது சகோதரரின் சடலத்தில் இரண்டாவது முறை பிரேதப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பதற்காகவே மலேசியாவில் தங்கினேன். தற்போது உடல் சென்றுவிட்டது. இதற்கும் மேல் அங்கு நான் தங்கியிருக்க வேண்டிய காரணமென்ன?” என்று சார்ல்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தம்மை கோழை என்று குறிப்பிட்டமைக்காக ஐஜிபி மீது வழக்கு தொடர்வது குறித்து பரீசிலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய ஆதாரங்களை உள்ளடக்கிய பென்டிரைவ் ஒன்று தம்மிடம் இருப்பதாக சார்ல்ஸ் முன்பு கூறியிருந்தார். அந்தப் பென்டிரைவ் விசாரணைக்கு உதவும் வகையில் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுமா? என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ள அவர், அதுகுறித்து தமது வழக்கறிஞரிடம் தொடர்ந்து ஆலோசித்து வருவதாகத் தெரிவித்தார்.