“கட்சிக்கு வெளியே இருக்கும் நூற்றுக்கணக்கான மஇகா கிளைத் தலைவர்களையும், கட்சியில் தேசிய நிலையிலும், மத்திய செயலவையிலும் பதவி வகித்த சில முன்னாள் தலைவர்களையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டுவருவதற்குத் தயார் என நமது மஇகா தேசியத் தலைவர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, கட்சிக்குள் மீண்டும் திரும்பும் அந்தத் தலைவர்களுக்கு வழங்கப்படும் பதவிகள் குறித்து முக்கியத்துவம் கொடுத்து, நாள்தோறும் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதே வேளையில் கட்சியில் இருக்கும் பல தொகுதித் தலைவர்களும், தேசிய நிலையில் பதவி வகிக்கும் சில தலைவர்களும்கூட கட்சிக்குள் வெளியே இருப்பவர்கள் மீண்டும் உள்ளே வருவது குறித்து மிகுந்த அதிருப்தி கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் நான் உணர்ந்துள்ளேன்” என இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையொன்றில் சந்திரசேகர் சுப்பையா தெரிவித்துள்ளார்.
சந்திரசேகர் சுப்பையா முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் என்பதோடு, மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் துணைத் தலைவருமாவார்.
“நான் தலைவராக இருக்கும் பண்டார் துன் ரசாக் தொகுதியில் கூட, கட்சியில் நடந்த தலைமைத்துவப் போராட்டத்தின் காரணமாக, முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்கு ஆதரவாகச் செயல்பட்ட சில கிளைகள் இந்த ஆண்டு நடைபெற்ற மறு-தேர்தல்களில் வேட்புமனுத் தாக்கல் எதையும் செய்யவில்லை. ஆனால் இந்தக் கிளைகளும் மீண்டும் நமது கட்சிக்குள், எனது தொகுதியின் வாயிலாக அனுமதிக்கப்படுவதை நான் இருகரம் நீட்டி வரவேற்கின்றேன்” என்றும் சந்திரசேகர் சுப்பையா மேலும் கூறியுள்ளார்.
“மீண்டும் நமது கட்சிக்குள் திரும்பி, சேவையாற்ற நினைக்கும் நமது சகோதர கிளைத் தலைவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தவும், முட்டுக்கட்டைகளைப் போடவும் நாம் முயற்சி செய்யக் கூடாது. சில மாதங்களுக்கு முன்னர்தான் அவர்களும் நம்மில் ஒருவராக நம்மிடையே வலம் வந்தார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது” என்றும் சக மஇகாவினருக்கு நினைவுறுத்தியுள்ளார்.
“முதலில் நாம் அனைவரும் ஒரே கட்சியாக ஒன்றுபட்டு, நமது கட்சியை பலப்படுத்தி, செம்மையாக இயங்கச் செய்து, எதிர்வரும் 14வது பொதுத் தேர்தலில் பலம் பொருந்திய எதிர்க்கட்சிக் கூட்டணியை எதிர்கொள்ளத் தயாராவோம். இதன் அடிப்படையில், கட்சிக்கு வெளியில் இருப்பவர்களை மீண்டும் இணைக்கும் நடவடிக்கையில் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் நாம் நமது முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்கி, அவருக்கு உறுதுணையாக நிற்போம் எனவும் வலியுறுத்த விரும்புகின்றேன்” என்றும் சந்திரசேகர் சுப்பையா தனது பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.