சென்னை – நடிகர் விஜய், சென்னை நிவாரண நிதியாக 5 கோடிகளுடன் காத்திருக்கிறார். எனினும், தமிழக அரசு சார்பில் அவருக்கு இன்னும் சரியான நேரம் ஒதுக்கப்படவில்லை. அதனால் அவரால் நிவாரணத் தொகையை கொடுப்பதற்கு முடியவில்லை என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகின. பிரபல நாளிதழ்களும் அதனை வெளியிட்டதால், பல்வேறு தரப்பில் இருந்தும் விஜய்க்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
ரஜினியை விமர்சித்த ராம்கோபால் வர்மாவே, விஜயை பாராட்டினார். ஆனால், விஜயுடன் ‘தெறி’ படத்தில் நடித்து வரும் நடிகை எமி ஜேக்சனின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு, தற்போது சில விஷயங்களை தெளிவுபடுத்தி உள்ளது.
எமி தனது பதிவில், ” விஜய், நான் மற்றும் படக்குழுவினர் ‘தெறி’ படப்பிடிப்பிற்காக கோவாவில் இருக்கிறோம். படப்பிடிப்பு கடைசி கட்டப்பணிகளில் இருக்கிறது. நாங்கள் சென்னையில் இல்லாததால், நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. எங்களின் அடுத்தகட்ட பணி, சென்னையை புனரமைப்பது தான். நன்கொடைகள் மூலம் அதனை செய்ய முடியும். சென்னையை மீட்டுக் கொண்டுவர அனைவரும் ஒன்று சேர்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆக, விஜய் தற்போது கோவாவில் இருக்கிறபோது, அவர் நிவாரணத் தொகையுடன் காத்திருப்பதாக வந்த செய்தியின் நிலைப்பாடு என்ன? 5 கோடியை அரசிடம் தான் நேரடியாக கொடுக்க வேண்டுமா? நடிகர் சங்கம் நடிகர்களிடம் நேரடியாக நிவாரணத் தொகையை வாங்கி வரும்நிலையில், அவர்களிடம் ஒப்படைக்கலாமே?
தமிழக அரசிடம், நடிகர் சங்கம், ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டவர்கள் சார்பில் நிவாரணத் தொகை தடங்கலின்றி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், விஜய் மட்டும் ஏன் காத்திருக்கிறார்? என்பது தெரியவில்லை.
இதற்கிடையே, 5 கோடி நிவாரணநிதி அளிக்கப்படும் என்று விஜய் தரப்பிடம் இருந்து எவ்வித அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.