கோலாலம்பூர் – மலேசியாவில் இனி தரமான படைப்புகளுக்கு மட்டுமே தனது சலுகைகளை அளிக்க தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (Finas) முடிவெடுத்துள்ளது.
தற்போது வரை மலேசியத் தயாரிப்பு திரைப்படங்களுக்கு வழங்கப்பட்டு வரும், ‘skim wajib tayang’ எனப்படும், திரையரங்குகளில் இரண்டு வார கட்டாயத் திரையிடல் முறையை அடுத்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் கட்டுப்படுத்தவுள்ளது. அதாவது, தாங்கள் எதிர்பார்க்கும் தரத்தை அடையாத படங்களுக்கு அந்தச் சலுகையை வழங்கப் போவதில்லை என பினாஸ் முடிவெடுத்துள்ளது.
இது குறித்து பினாஸ் இயக்குநர் டத்தோ கமீல் ஓத்மான் கூறுகையில், தங்களது குழுவினர் அந்தத் திரைப்படம் ‘skim wajib tayang’ சலுகைக்கு தகுதி வாய்ந்ததா? என்பதை ஆராயும் என்று தெரிவித்துள்ளார்.
“அந்தக் குழுவில் கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உள்ளூர் திரைப்பட ரசிகர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒரு திரைப்படத்தை அவர்கள் பார்த்துவிட்டு பச்சைக் கொடி காட்டத் தவறினால், திரைப்படத் தயாரிப்பாளர்கள், தங்களது சொந்த விநியோகஸ்தர்களைக் கொண்டு, அதன் உரிமையை தொலைக்காட்சி நிறுவனங்களுக்கோ அல்லது சிடி, டிவிடி அல்லது புளூரே தட்டு முறையிலே மாற்றி விற்பனை செய்து கொள்ள வேண்டும்” என்றும் கமீல் தெரிவித்துள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு வெளியான மலேசியப் படங்களில் 67 சதவிகிதப் படங்கள், பினாஸ் எதிர்பார்க்கும் தகுதியைப் பெறவில்லை என்றும், அதனைத் தொடர்ந்து தான் இந்த குழுவை நியமனம் செய்ய பினாஸ் முடிவு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1991 -ம் ஆண்டு முதல், மலேசியத் தயாரிப்பு படங்களுக்கு இந்தக் கட்டாயத் திரையிடல் சலுகை அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் கமீல் விளக்கமளித்துள்ளார்.