Home Featured தமிழ் நாடு இந்து தம்பதியருக்கு பிறந்த குழந்தையின் பெயர் யூனுஸ் – சென்னை வெள்ளம் தந்த மத சகிப்புத்தன்மை!

இந்து தம்பதியருக்கு பிறந்த குழந்தையின் பெயர் யூனுஸ் – சென்னை வெள்ளம் தந்த மத சகிப்புத்தன்மை!

770
0
SHARE
Ad

yunush1சென்னை – சென்னை வெள்ளத்தால் எத்தனை இடையூறுகள் ஏற்பட்டாலும், நடந்த, நடக்கின்ற சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் அனைத்தையும் தாங்குகின்ற மன தைரியத்தை மக்களுக்கு கொடுக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.

சென்னை ஊரப்பாக்கம் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, மோகன் என்பவர் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவி சித்ராவை வெள்ளத்தில் இருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்க்க பல்வேறு வகையில் போராடிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது அங்கு சரியான சமயத்தில் வந்த யூனுஸ் என்பவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து படகு ஒன்றின் மூலம் சித்ராவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

அதன் பிறகு, யூனுஸ் அதனை மறந்து மற்றவர்களை மீட்கும் பணியில் இறங்கி உள்ளார். இந்நிலையில், பேஸ்புக் மூலம் யூனுசை தொடர்பு கொண்ட மோகன், தனக்கு மகள் பிறந்து இருப்பதாகவும், அவளின் பெயர் ‘யூனுஸ்’ என்றும் கூற, நெகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார் யூனுஸ்.

#TamilSchoolmychoice

இந்த சம்பவம் குறித்து யூனுஸ், ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “சென்னையில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஊரப்பாக்கமும் ஒன்று. நான் என் நண்பர்களுடன் சேர்ந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு இருந்தேன். அப்போது தொலைவில் இருந்து பெண் ஒருவர், அலறும் சத்தம் கேட்டது. குறிப்பிட்ட அந்த பகுதிக்கு நான் விரைந்த போது, நிறைமாத கர்ப்பிணியான சித்ரா பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அவரை எனது நண்பர்கள் மற்றும் மீனவர்கள் சிலரின் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தோம். அந்த 15 நிமிட படகுப் பயணம் என்னால் என்றும் மறக்கவே முடியாது”

“மோகன் என்ன தொடர்பு கொண்டு அவரது மகளுக்கு எனது பெயரை சூட்டி இருப்பதை கூறியவுடன் நான் மிகுந்த ஆச்சரியம் உற்றேன். யூனுசின் கல்விச் செலவுகளை நானே ஏற்க முடிவு செய்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மேலும் அவர், தனது பேஸ்புக் பதிவில், இந்த சம்பவத்தை குறிப்பிட்டு, ‘மதம் என்பது பின்பற்றத்தான், பயன்படுத்த அல்ல’ என்றும் பதிவு செய்து இருப்பது அனைவரையும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.