சென்னை : புயலுடன் கூடிய பெருமழையால் சென்னை முழுக்க கடும் பாதிப்புகள் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திமுக அரசாங்கம் மீதான கண்டனக் கணைகள் பெருகி வருகின்றன.
வெள்ளம் பல இடங்களில் வடிந்து வருகின்றது. மக்கள் படும் அவதிகளால் திமுகவுக்கு எதிராக ஏற்பட்டிருக்கும் சாடல்களால் எழுந்திருக்கும் அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்தி அதிமுக தலைவர்கள் திமுகவின் நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
4000 கோடி ரூபாய் வெள்ள நிவாரணப் பணிகளுக்காக செலவிட்டதாகக் கூறும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டுமென அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
பல பகுதிகளில் வெள்ளத்தால் சேறும் சகதியுமாக இருப்பதாலும், குப்பைக் கூளங்கள் குவிந்து கிடந்து இருப்பதாலும், மக்கள் வெளியே வர முடியவில்லை. மின் தடையால், தெருக்கள், வீடுகள் இருளில் மூழ்கியிருக்கின்றன. தண்ணீர் இல்லாததால் கழிப்பறை செல்ல முடியாமல் மக்கள் சிரமப்பட்டனர்.
பலருக்கு உணவு கிடைக்கவில்லை. பலர் கிடைத்த உணவையும் சாப்பிடாமல் பட்டினி கிடந்தனர். இணையவசதி இல்லாததால், தொலைத் தொடர்பு தடையால், மக்கள் பரிதவிக்கின்றனர்.
திமுக அமைச்சர்களையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் தாமதமாக வருவதற்காக ஆங்காங்கே மக்கள் கூடி நின்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்றும் காணொலிகள் வெளியிடப்படுகின்றன.
சென்னையைச் சுற்றியுள்ள ஏரிகளின் அணைகள் திறந்து விடப்பட்டதாலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன.
தனது வீட்டிலும் வெள்ளம் சூழ்ந்ததாக நடிகர் விஷால் காணொலி மூலம் தெரிவித்திருக்கிறார். நடிகர் ரஜினி வீட்டிலும் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டதாகவும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வீட்டிலும் வெள்ளம் சூழ்ந்ததாவும் செய்திகள் தெரிவித்தன.
சட்டமன்ற உறுப்பினர்களும் சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் என யாரும் வெள்ளம் பாதித்த இடங்களை பார்வையிடக்கூட வரவில்லை என பல புகார்கள் எழுந்துள்ளன.
சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த, இரு சக்கர வாகனங்களும், ஆயிரக்கணக்கான மற்ற ரக வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கி பாதிப்படைந்தன.
கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி சென்னை வந்த தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்ததோடு, வெள்ளப் பேரிடர்களையும் பார்வையிட்டார்.
இதற்கிடையில் தன் ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரணப் பணிகளுக்கு வழங்குவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.