கோலாலம்பூர் – “தேசிய முன்னணி – பாஸ் கூட்டணிக்கு மஇகா எதிர்ப்பு தெரிவிக்காது என்று ம.இ.காவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் கருத்துக்குத் தற்பொழுது மார்தட்டிக் கேள்வி கேட்கும் பேராசிரியர் இராமசாமி, பாஸ் – ஐசெக கூட்டணியின் போது எங்கிருந்தார்?” என மஇகா தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ வி.எஸ்.மோகன் கேள்வி தொடுத்துள்ளார்.
“இன்று மஇகா பாஸ் கூட்டணியை எதிர்க்காது என்று கூறியதில் மட்டும் இராமசாமி பல குளறுபடிகளை உண்டாக்கி சுய இலாபம் காண விரும்புகின்றார். ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியத்தைக் கேள்வி கேட்பதற்கு முன் அவருடைய முழு விளக்கங்களையும் கேட்டு தெளிவு பெற்றிருக்க வேண்டும். நுனிப் புல்லை மேய்ந்தது போல் மேலோட்டமாகத் தலைப்புச் செய்தியை மட்டும் வாசித்து விட்டு வியாக்கியானம் பேசுவதுதான் ஒரு மாநில துணை முதலமைச்சரின் பண்பா?” என்றும் மோகன் கூறியுள்ளார்.
“டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்து முடிந்த ம.இ.கா கட்சி தேர்தலுக்குப் பின் ம.இ.கா சரியான பாதையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது என்பதை அனைவராலும் உணர முடிகின்றது. இந்த உண்மையை இராமசாமியும் உணர்ந்துள்ளார். அந்த விரக்தியில் தான் ம.இ.காவின் ஒவ்வொரு கட்ட நடவடிக்கைகளையும் ஆராய்ந்து கொண்டு அதனை இந்திய சமுதாயத்திற்கு எதிராக திருப்பி விடும் பணியில் இறங்கியுள்ளார்” என மோகன் சாடினார்.
“இந்திய சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ம.இ.கா முழு மூச்சுடன் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றது. அந்த முயற்சிகளை வெற்றியடையச் செய்வதற்கான வழிமுறைகளை மஇகாவால் கையாள முடியும். ம.இ.காவின் நடவடிக்கைகளை மட்டும் நோட்டமிட்டுக் கொண்டிருக்காமல் இராமசாமி பினாங்கு மாநிலத்தில் இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்கினால் சிறப்பாக இருக்கும். அதைவிடுத்து ம.இ.காவின் கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்று சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்வது அழகல்ல” என்றும் மோகன் தெரிவித்துள்ளார்.