கோலாலம்பூர் – பிரதமர் நஜிப் பெற்ற 2.6 பில்லியன் நன்கொடை விவகாரம், மற்றும் எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனம் (SRC International) ஆகியவை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அடுத்த வாரம் அரசாங்கத் தலைமை வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கும்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் சிறப்பு நடவடிக்கை அதிகாரி டத்தோ பாஹ்ரி முகமட் சின், இந்த விவரத்தை பத்திரிக்கை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் எதுவும் எழுந்துள்ளனவா, அல்லது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டும் அளவுக்கு வழக்குகள் இருக்கின்றனவா என்பது குறித்து ஊழல் தடுப்பு ஆணையம் முன்மொழியும் எனவும் பாஹ்ரி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணையைத் தாங்கள் நிபுணத்துவ அணுகுமுறையோடும், வெளிப்படைத் தன்மையோடும் மேற்கொண்டதாகவும், ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் டான்ஸ்ரீ அபு காசிம் நிர்ணயித்த விதிமுறைகளுக்கு ஏற்ப நடத்தியதாகவும் பாஹ்ரி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
2.6 பில்லியன் நன்கொடையாளரின் அடையாளத்தை வெளியிட வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரபிசி ரம்லி விடுத்திருக்கும் வேண்டுகோள் குறித்தும் பாஹ்ரி கருத்துரைத்தார்.
“ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், சட்டத்தை உருவாக்குபவர் என்ற முறையிலும், ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைகளை பகிரங்கமாக வெளியிடுவதற்கு சட்டரீதியான கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பதை அவருக்கு நினைவுபடுத்த விரும்புகின்றோம். ஊழல் தடுப்பு ஆணைய சட்டம் 2009இன் படி விசாரணைத் தகவல்களை பொதுமக்களுக்கு வெளியிட ஆணையத்திற்கு அனுமதியில்லை. சட்டத்திற்கு எதிரானது அல்ல என்றால் விசாரணைத் தகவல்களை வெளியிடுவதில் எங்களுக்குப் பிரச்சனையில்லை” என்றும் பாஹ்ரி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.