பெய்ஜிங் – இந்தப் புத்தாண்டில் ஹாங்காங்கில் வெளிவரவிருக்கும் புத்தகம் ஒன்று, புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கம்யூனிஸ்ட் சீனாவின் மிகவும் மரியாதைக்குரிய முதல் பிரதமரான சோ என்லாய், ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், அவர் தன்னுடைய பள்ளித் தோழனுடன் மிகவும் நெருக்கமான அன்பு வைத்திருந்ததாகவும் அப்புத்தகம் கூறுகின்றது.
லிபரல் அரசியல் இதழின் முன்னாள் ஆசிரியரும், ஹாங்காங்கைச் சேர்ந்த எழுத்தாளருமான சொய் வின் முய், ஓரினச்சேர்க்கையாளர்களை மையப்படுத்தி தனது முதல் புத்தகத்தை எழுதியுள்ளார்.
சோ மற்றும் அவரது மனைவி டெங் யிங்சாவ் எழுதிய கடிதங்களாக பொதுவில் வெளியிடப்பட்டுள்ள சில கடிதங்களைப் படித்து அதனை ஆராய்ச்சி செய்துள்ள சொய் வின், அதில் பள்ளித் தோழரின் மேல் சோ வைத்திருந்த மோகம் மற்றும் அவரது மனைவி மீது அவ்வளவு உணர்ச்சிப் பற்றின்றி இருந்துள்ளதையும் சுட்டிக் காட்டி அவர் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
கடந்த 1949-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவில் நடந்த புரட்சியை அடுத்து சோ என்லாய் பிரதமரானார். அவர் 1976-ம் ஆண்டு புற்றுநோயால் காலமாகும் வரை அங்கு கம்யூனிஸ்ட் கட்சியில் அவரது ஆதிக்கம் வலுப்பெற்றிருந்தது.
படம்: EPA