கோலாலம்பூர் – 2015-ம் ஆண்டில் நடந்த உலகில் மிக மோசமான ஊழல் பட்டியலில் மலேசியா 3-வது இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனத்தின் ஒரு பிரிவான ஃபாரின்பாலிசி.காம் (foreignpolicy.com) அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தி இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ஊழலில் உலக அளவில் கவனிப்பிற்குள்ளான தலைவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், கால்பந்தாட்டத்தில் ஊழல் செய்தவர்கள் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியலில், முதலாவதாக ஃபிபா (Federation Internationale de Football Association) ஊழலும், இரண்டாவதாக நைஜீரியா ஊழலும், மூன்றாவதாக மலேசியாவும் இடம்பெற்றுள்ளது.
மலேசியப் பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் 700 மில்லியன் அமெரிக்க டாலர் (2.6 பில்லியன் ரிங்கிட்) பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜார்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்ட அடுத்த 4 மாதங்களில், அமெரிக்க அதிபர் ஒபாமா மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங், “கேவத்திலும் கேவலம்” என்று வர்ணித்துள்ளார்.
“இதற்கு முன் கண்டிராத அளவில் இப்படி ஒரு அவமானத்தைத் தேடித் தந்து மலேசியாவை உலக அளவிற்கு கொண்டு சென்றுள்ள பிரதமரிடமிருந்து இன்று இரவு 2016-ம் ஆண்டிற்கான புத்தாண்டு வாழ்த்தை மலேசியர்கள் எதிர்பார்க்கவுள்ளார்களா?” என்று லிம் கிட் சியாங் கேள்வி எழுப்பியுள்ளார்.