Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: மாலை நேரத்து மயக்கம் – செல்வராகவனின் மீண்டும் ஒரு காதல் கதை!

திரைவிமர்சனம்: மாலை நேரத்து மயக்கம் – செல்வராகவனின் மீண்டும் ஒரு காதல் கதை!

921
0
SHARE
Ad

Maalai-Nerathu-Mayakkam-Official-Teaser-2சென்னை – செல்வராகவனின் வழக்கமான ‘அட்டு’ பையன், ‘குட்டு’  பொண்ணு இடையேயான கல்யாணம், மோதல் பின்னர் காதல் தான் ‘மாலை நேரத்து மயக்கம்’. பாக்யராஜ் போன்ற ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே மிக லாவகமாக கையாண்ட, கணவன்-மனைவி தாம்பத்தியத்தை ‘செல்லுலாய்ட்’ காலத்திற்கேற்ப ரசிக்கும் வகையில் கொடுத்து இருக்கிறார் அறிமுக இயக்குனர் கீதாஞ்சலி செல்வராகவன். அந்தத் துணிச்சலுக்கு முதலில் நமது பாராட்டுக்கள்.

கதை சுருக்கம்

எண்ணெய்யில் ‘தோய்த்து’ அழுந்த வாரிய முடி, பொட்டிக் கண்ணாடி, பெண்களைக் கண்டால் 100 அடி தூரம் ஓடும் கூச்ச சுபாவத்துடன் இருக்கும் பிரபுவை, தனது தாயின் வற்புறுத்தலால் வேண்டா வெறுப்பாய் திருமணம் செய்து கொள்கிறாள் மனோஜா. முதலிரவு அன்றே தனது மனைவிக்கு தன்னை பிடிக்கவில்லை என்பதை தெரிந்து கொள்ளும் நாயகன், அவளின் காதலுக்காக பொறுமையுடன் காத்திருக்கிறான்.

#TamilSchoolmychoice

ஒருகட்டத்தில் பிரபுவின் அன்பு, மனோஜாவிற்கு மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது. ‘விலகியே’ இருக்கும் இருவரும், தங்களது இரண்டாவது ஆண்டு, திருமண நாளைக் கொண்டாடத் திட்டமிடுகின்றனர். ‘மாலை நேரத்து மயக்கத்தில்’ மது போதையில் மனைவியையே, பிரபு பலாத்காரம் செய்ய, அவனை விட்டுப் பிரிகிறாள் மனோஜா. அதன் பிறகு இருவருக்கும் என்ன ஆனது என்பது தான் மீதிக் கதை.

maalai-nerathu-mayakkam1நடிப்பு

‘பூ மாதிரி பொண்ணு வேணும் னு நெனச்சேன்..பொண்ணு கெடைக்கல பூதான் கெடச்சுது’ என நண்பனிடம் விரக்தியாக வசனம் பேசுவதில் தொடங்கி, மது போதையில் மனைவியிடம் மூர்க்கமாக நடந்து கொள்வது, பின்னர் நடந்த தவறுக்காக அவளின் காலில் விழுந்து கதறுவது என ஒவ்வொரு காட்சியிலும் ‘7ஜி ரெயின்போ காலனி’ நாயகனை நினைவுபடுத்துகிறார் அறிமுக நாயகன் ரவி கிருஷ்ணா..இல்ல..இல்ல பால கிருஷ்ண கோலா.

கணவன் மீது அருவருப்பான பார்வையைப் பார்ப்பதாகட்டும்..அவனது அம்மாஞ்சித் தனத்தை அவன் கடந்து போன பிறகு மெல்லிய புன்னகையுடன் ரசிப்பதாகட்டும் மனோஜா கதாபாத்திரத்தில் அறிமுக நாயகி வாமிகா ‘நச்’ பொருத்தம்.

குறிப்பாக, ‘என் ஈகோவெல்லாம் ஒடச்சு உம் மேல காதல் வந்துச்சு. அத உன் அவசர புத்தியால கெடுத்துட்டியேடா பாவி’ என இறுதிக் காட்சியில் கதறுமிடத்தில் மிக அழுத்தமாக நடித்திருக்கிறார் வாமிகா. நாலு பாட்டு, கொஞ்சம் கவர்ச்சி என படத்தின் ஓரத்தில் மட்டும் நாயகிகளை பயன்படுத்தாமல், மனோஜா போன்று கதையை சுமக்கும் கதாபாத்திரங்களை செல்வா போன்ற கலைஞர்களிடம் மட்டுமே நாம் எதிர்பார்க்க முடியும்.

இவர்கள் தவிர, நாயகனின் அப்பாவாக வரும் அழகம் பெருமாள், ‘பாய்பிரண்ட்’  ஷரன், நாயகனின் நண்பனாக வரும் புதுமுக நடிகர், வாமிகாவின் அம்மாவாக நடித்திருக்கும் கல்யாணி நட்ராஜன் ஆகியோர் ‘அக்மார்க்’ செல்வராகவன் பட கதாபாத்திரங்கள். அவர்களும் அதனை ஓரளவு சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.

திரைக்கதை  & வசனம்

ஒரு அறிமுக இயக்குனராக கீதாஞ்சலி நம்மை அசத்தினாலும், அனுபவ செல்வராகவன், தான் கவனித்துக் கொண்ட திரைக்கதை மற்றும் வசனத்தில் நம்மை சற்றே ஏமாற்றிவிட்டார்.

குறட்டையை பதிவு செய்து, நாயகனை வெறுப்பேத்துவது. கணவனைப் பிரிந்து தூக்கம் தொலைத்த ஓர் இரவில், அதே குறட்டைச் சத்தத்தைக் கேட்டுக் கொண்டே நாயகி தூங்க, புதிதாய் காதல் பிறக்கும் அந்த தருணம்.

‘எல்லாப் பையனையும் மேய்க்க ஒரு பொண்ணு வருவா..அப்படி இவனுக்கும் ஒருத்தி வந்தா..ஆனா என்னாச்சோ தெரியல அவளும் போய்டா’ என மகனை கட்டிக் கொண்டு அழகம் பெருமாள் அழும் தருணம்.

பசங்க..பசங்க னு இடுப்புல தூக்கி வச்சு ஆடுறோம்..சரியான நேரத்துல இறக்கி விடல னா இப்படி தான்.

கல்யாணம் ஆகி நீ எனக்கு எதுவுமே குடுக்கல..ஆனா இப்ப நீ சிக்கன் குனியாவ குடுத்துட்டியே..

இப்படியாக சில இடங்களில் செல்வாவை நாம் பார்க்க முடிகிறது. என்றாலும், ‘தெருமுனைல உக்காந்துகிட்டு உப்ஃபூ உப்ஃபூ னு ஊதுறியே..அது சிகரட்டு இல்லடா..உங்கப்பனோட ரத்தம் டா’ போன்ற செல்வாவின் பளிச் வசனங்கள் இதில் குறைவு தான்.

ஒரு பெண்ணுக்கு பிடிக்காத ஒரு பையன், பின்னாடி அவளுக்கு எல்லாமுமா மாறும் சாதாரணமான கதையை ‘7ஜி ரெயின்போ காலனி’ படம் மூலம் சுவாரசியமாகச் சொன்ன அந்த ‘டச்’ இதில் காணோமே செல்வா.

Maalai-Nerathu-Mayakkam-posterஒளிப்பதிவு & இசை

பெரிய அளவிலான பிரமாண்டக் காட்சியமைப்புகளோ, அரங்கங்களோ தேவைப்படாத கதை. பெரும்பான்மையான காட்சிகள் குடியிருப்புப் பகுதிக்குள்ளாகவே முடிந்து விடுகிறது. ஆனாலும் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் தான். புதுமுகம் அம்ரித்தின் பின்னணி இசையும், பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. குறிப்பாக முணுமுணுக்க வைக்கும் ‘காதல் தேன் சுவையா’ பாடல், நாயகனின் குரலை ஒத்து இயல்பாய் அமைந்திருக்கிறது.

வயது வந்தவர்களுக்கான படம் என்பதின் அடையாளமாக ‘ஏ’  சான்றிதழுடன் இப்படம் வெளியாகி உள்ளது. எனினும், கதையின் பின்னணி கருதி எடுக்கப்பட்டுள்ள ஒரு சில காட்சிகளைத் தவிர, ஆபாசமோ, இரட்டை அர்த்த வசனங்களோ இப்படத்தில் இல்லை.

மொத்தத்தில், மாலை நேரத்து மயக்கம் – கீதாஞ்சலி செல்வராகவனின் துணிச்சலான முதல் முயற்சி. நம்மையும் கொஞ்சம் மயக்குகிறது.

– சுரேஷ் சிவசங்கரன்