சென்னை – பொங்கல், தீபாவளி கொண்டாட்டங்கள் என்றால், தமிழ்த் திரைப்பட இரசிகர்களுக்கும் கொண்டாட்டம்தான். உச்ச நடிகர்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பிரம்மாண்டமான – அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியிருக்கும் திரைப்படங்கள் களம் காணுவதும் இந்த சமயத்தில்தான்!
அந்த வகையில், இந்த ஆண்டுப் பொங்கலுக்கு ஐந்து முக்கிய படங்கள் திரையிடப்படுகின்றன.
சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’
பாலாவின் தாரை தப்பட்டை
நடிகருமான இயக்குநருமான சசிகுமார் கதாநாயகனாகவும், சரத்குமாரின் மகள் வரலெட்சுமி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். திருவிழாக்களில் நாதஸ்வரம், மேளம் வாசிக்கும் கலைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டப் போகும் படம் என்பதாலும், பாலாவின் கைவண்ணம் என்பதாலும், இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விஷாலின் ‘கதகளி’
மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக வந்த கேத்தரின் தெரசா இதில் விஷாலுடன் இணைகின்றார். தனி ஒருவனுக்குப் பிறகு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கும் படம் என்பதால், இசை-பாடல் அம்சங்களிலும் கொஞ்சம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது இந்தப் படம்.
உதயநிதி ஸ்டாலினின் ‘கெத்து’
என்னைப் பார்க்க, எனது நடிப்பைப் பார்க்க சுமாராகத்தான் இருக்கும், ஆனால், என்கூட நடிக்கும் கதாநாயகியைப் பாருங்கள் சூப்பராக இருக்கும் என்ற தோரணையில் தனது படங்களை எடுத்துக்கொண்டிருக்கும் உதயநிதி, நயன்தாரா, ஹன்சிகா ஆகியோரை அடுத்து இந்தப் படத்தில் ஜோடி போடுவது வெள்ளைக்கார நடிகை எமி ஜாக்சனோடு.
ஹாரிஸ் ஜெயராஜின் இசை, ‘மான் கராத்தே’ வெற்றிப் படத்தை முதன் முதலாக இயக்கி அறிமுகம் கண்ட திருக்குமரனின் இயக்கம் என மேலும் சில சிறப்பம்சங்களாலும், இரசிகர் வட்டாரங்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றது இந்த ‘கெத்து’.
அருள்நிதியின் ‘ஆறாது சினம்’
பெரிய நான்கு படங்களுக்கிடையில் தனது படத்தையும் போட்டியில் இறக்குவது என்பது அருள்நிதியின் துணைச்சலைக் காட்டுகின்றது. ‘ஈரம்’ வெற்றிப் படத்தை எடுத்து, தமிழ்த் திரையுலகைத் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த அறிவழகனின் இயக்கம் என்பதால், இந்தப் படத்திற்கும் எதிர்பார்ப்பு கூடியிருக்கின்றது.
எனவே, வெளிவரப்போகும் ஐந்து படங்களில் வெற்றியடையப் போவது எது – போட்டியில் முந்தப்போகும் படம் எது – அடிவாங்கப் போகும் படம் எது என்ற கேள்விகளோடு ஆவலுடன் காத்திருக்கின்றது, தமிழ்த் திரையுலகம்!
-செல்லியல் தொகுப்பு