கோலாலம்பூர் – தனக்கு எதிரான நஜிப்பின் அவதூறு வழக்கை நடுவர் முறையில் (Mediation) தீர்த்துக் கொள்ள முன்னாள் மசீச தலைவர் துன் டாக்டர் லிங் லியோங் சிக் தயார் என்றாலும், பேச்சுவார்த்தைகள் நடக்கும் நேரத்தில் நஜிப் உடனிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து டாக்டர் லிங்கின் வழக்கறிஞர்களான ரஞ்சித் சிங் மற்றும் இயோ நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், “இந்த வழக்கு நடுவர் மூலமாகத் தீர்க்கப்படும் போது உண்மை மற்றும் வெளிப்படைத்தன்மையாக இருக்க வேண்டும். இல்லாத பட்சத்தில் அதைத் தொடங்க இயலாது”
“எல்லாவற்றுக்கும் மேலாக, பிரதமரும், டாக்டர் லிங்கும் ஒரே அமைச்சரவையில் சேவையாற்றி இருக்கிறார்கள். இல்லையென்றால், இந்த நடுவர் முறையில் தீர்ப்பது பயனற்றதாகியிருக்கும்” என்று அவர்கள் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் பணத்தை நஜிப் தனது வங்கிக் கணக்கில் போட்டுக் கொண்டதாக லிங் கூறிய கருத்துக்கு எதிராக, நஜிப் அவதூறு வழக்குத் தொடுத்தார்.
அதை விசாரணை செய்த கோலாலம்பூர் உயர்நீதிமன்றம், அவ்வழக்கை நடுவர்கள் மூலமாகத் தீர்க்க முயற்சி செய்யும் படியும், அம்முயற்சி தோல்வியடையும் பட்சத்தில் நீதிமன்றத்தை நாடும் படியும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.