கதைச் சுருக்கம்
ஒரு பள்ளியில் பி.டி.இ மாஸ்டர் எனப்படும் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆசிரியராக பணிபுரியும் சத்யராஜுக்கு மிகவும் ஒழுக்கமான மகன் உதயநிதி ஸ்டாலின். ஒரு முறை அந்த பள்ளிக்கு அருகில் இயங்கும் மதுபானக்கடையால் பள்ளி மாணவிகளுக்கு சில அசௌகரியங்கள் வர, சத்யராஜ் போலீசில் புகார் அளிக்கிறார்.
அந்த வில்லன்களில் ஒருவர் மர்மமான முறையில் இறக்க சத்யராஜ் கைது செய்யப்படுகிறார். அந்த கொலையின் பின்னணி என்ன? நிரபராதியான சத்யராஜை விடுவிக்க மகன் உதயநிதி எடுக்கும் முயற்சிகள் என்னென்ன என்பதுதான் திரைப்படத்தின் மீதிக்கதை.
நடிப்பு
கதாநாயகனான உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக நடிகர் சந்தானத்தின் நகைச்சுவை கூட்டணி உதவி இல்லாமல் களமிறங்கியிருக்கும் திரைப்படம். உதயநிதி நடனத்தில் நன்றாகவே தேர்ந்துள்ளார்.
ஆனால் ஒரு கமர்ஷியல் திரைப்படத்தைத் தனியாளாகத் தூக்கி சுமக்கும் அளவுக்கு அவர் இன்னும் மெருகேறவில்லையோ என்றே தோண்றுகிறது. பல இடங்களில் முந்தைய படங்களில் பார்த்துச் சலித்த அதே முகபாவனைகள். அவர் நண்பனாக வரும் கர்ணா மட்டும் சில இடங்களில் கவர்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சத்யராஜ் மட்டுமே. தன்னைச் சுற்றி நடக்கும் சிறு தவறுகளை கண்டு அவர் கோபப்படும் பொழுதும், பள்ளிக்கு வந்து மிரட்டும் வில்லன்களிடம் தைரியமாக நின்று பதில் பேசும் காட்சிகளிலும் உயர்ந்த மனிதர் மிளிர்கிறார்.
படத்தின் முக்கிய வில்லனாக வரும் நடிகர் விக்ராந்த் நன்றாகவே உழைத்திருக்கிறார். ஆனால் அவரின் அரைகுறையான பாத்திரப்படைப்பு படத்திற்கு ஏற்ற விறுவிறுப்பை தர மறுக்கிறது. மதுபானக்கடை முதலாளியாக வரும் ‘மைம்’ கோபி நல்ல தேர்வு.
தொழில்நுட்பக் கலைஞர்கள்
இயக்குனருக்கு ஒரு தூணாக நின்று படத்திற்கு தோள் கொடுத்திருப்பவர் ஒளிப்பதிவாளர் M.சுகுமார். காட்சிகளின் ஒளியமைப்பும் கோணங்களும் இந்திப் படங்களுக்கு நிகராக இருந்தாலும், பல இடங்களில் ஒளிப்பதிவு எதார்த்தத்தை மீறுகிறதோ என்றே தோன்றுகிறது.
ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் காதுகளுக்கு இனிமையாக இருந்தாலும், புதுமை இல்லை. சுவாரசியம் இல்லாத பல காட்சிகளை அவரின் பின்னணி இசை மூலம் சரிக் கட்ட முயன்றிருக்கிறார்.
மொத்தத்தில் திரைக்கதையில் கூடுதல் கவனமும், காட்சியமைப்பில் கொஞ்சம் புதுமையும் சேர்த்திருந்திருந்தால் தலைப்பில் மட்டும் இருக்கும் ‘கெத்து’ முழுப்படத்திலும் வெளிப்பட்டிருக்கும்.
கெத்து – தலைப்பில் மட்டும்!
-செல்லியல் திரைப்பட விமர்சனக் குழு