ஜோர்ஜ் டவுன் – கடந்த சில மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் இருந்து ஒதுங்கியிருந்த மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல், நேற்று அனைவரும் எதிர்பாராத விதமாக, பினாங்கு தைப்பூசக் கொண்டாட்டங்களில், பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி ஆகியோருடன் இணைந்து கலந்து கொண்டார்.
நேற்று மாலை 4.00 மணியளவில் பினாங்கு தைப்பூசத்திற்கு வருகை தந்த பழனிவேல் அதே நேரத்தில் வருகை தந்த லிம் குவான் எங், பி.இராமசாமி ஆகியோருடன் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
துணை முதல்வர் இராமசாமிக்கும் பழனிவேலுவுக்கும், அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல நட்பும், புரிந்துணர்வும் உண்டு என்பது மஇகா வட்டாரங்களில் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான்.
பல வேளைகளில் பழனிவேலுவைத் தற்காத்து இராமசாமி அறிக்கை விடுத்திருக்கின்றார் – பேசியிருக்கின்றார் – என்பதோடு, மஇகாவின் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரமணியத்திற்கு எதிராக பல வேளைகளில் அறிக்கை விடுத்திருக்கின்றார்.
பழனிவேலுவும், ஜசெகவின் முக்கியத் தலைவர்களும் இணைந்து கலந்து கொண்ட நிகழ்ச்சி, எதிர்பாராமல், தற்செயலாக நடந்ததா அல்லது முன்கூட்டியே திட்டமிட்டு நிர்ணயிக்கப்பட்ட நிகழ்ச்சியா என்பது குறித்த தகவல்கள் இல்லை.
நேற்றைய நிகழ்ச்சியின் மூலம் பழனிவேல் தரப்பினர், தங்களின் அடுத்த கட்ட அரசியல் காய் நகர்த்தலை மறைமுகமாக தெரிவிக்கின்றனரா என்ற ஆரூடங்கள் அரசியல் வட்டாரங்களிலும், சமூக வலைத் தளங்களிலும் தற்போது எழுப்பப்பட்டு வருகின்றன.
தாங்கள்தான் உண்மையான, அதிகாரபூர்வ மஇகா கட்சி என இன்னும் கூறிவரும் பழனிவேல் தரப்பினர் தங்கள் வசம் இன்னும் சுமார் 1,800 மஇகா கிளைகளின் ஆதரவு இருப்பதாகக் கூறிவருகின்றனர். இந்த 1,800 கிளைகள் மஇகாவுக்கு வெளியே இருப்பதாகக் கூறும் இவர்கள், இந்த கிளைகளின் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.
இருப்பினும், இவர்களின் தரப்பு வாதங்களை ஆர்ஓஎஸ் எனப்படும் சங்கப் பதிவகம் இதுவரை ஏற்றுக் கொள்ளவில்லை.
ஆனால், சங்கப் பதிகவகத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மஇகாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கூற்றுப்படி, இதுவரை மஇகாவுக்கு வெளியில் இருக்கும் மஇகா கிளைகளின் எண்ணிக்கை சுமார் 800தான் இருக்கும் என்றும், அதில் 342 கிளைகள் கடந்த வருடம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற வேட்புமனுத் தாக்கல்கள் வாயிலாக மீண்டும் மஇகாவில் இணைந்து விட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஞ்சிய மஇகா கிளைகளுக்கு எதிர்வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பல மஇகா கிளைத் தலைவர்கள் மஇகா தலைமையகத்தை அணுகி வருகின்றனர் என மஇகா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் பழனிவேல் தரப்பினரின் முக்கியத் தலைவர்கள் யாரும் இதுவரை மீண்டும் மஇகாவில் இணைவது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை.
ஜனவரி 31ஆம் தேதிக்குள் மீண்டும் மஇகாவுக்குத் திரும்பாவிட்டால், பழனிவேல் தரப்பினர் தொடர்ந்து தனிக் குழுவாகத் தங்களின் போராட்டங்களைத் தொடர்வார்களா அல்லது தேசிய முன்னணி ஆதரவுக் குழுவாக செயல்படுவார்களா அல்லது எதிர்க்கட்சிக் கூட்டணியுடன் இணைந்து கொள்வார்களா என்ற கேள்வி அண்மையக் காலமாக அரசியல் வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் நேற்று பழனிவேல் ஜசெகவின் முக்கியத் தலைவர்களுடன் இணைந்து பினாங்கு தைப்பூசத்தில் கலந்து கொண்டது, தற்செயலான சம்பவமா, அல்லது அடுத்து நடக்கப் போகும் அரசியல் மாற்றங்களுக்கான முதல் கட்ட அச்சாரமா என்பது போகப் போகத்தான் தெரியும்!
-செல்லியல் தொகுப்பு