ரெங்கம் (ஜோகூர்) – மலேசியா நாட்டைப் பொறுத்தவரையில் ஒரு மாநிலத்தின் சுல்தானாக இருக்கும் ஆட்சியாளர், அந்த மாநிலத்தின் இஸ்லாமிய விவகாரங்களுக்கான தலைவராகவும் செயல்படுகின்றார். இந்நிலையில், அண்மையக் காலம் வரை எந்த ஒரு சுல்தானும், எந்த இந்து ஆலயங்களுக்கும் வருகை தந்ததில்லை என்பதோடு, இந்து சமயத்தைக் குறிக்கும் திருவிழாக்களிலும் கலந்து கொண்டதில்லை.
அந்த சம்பிராதயத்தை முறியடித்து, வரலாறு படைத்திருக்கின்றார் ஜோகூர் சுல்தான் – நேற்று ஜோகூர் மாநிலத்தில் உள்ள ரெங்கம் முருகன் ஆலயத்தில் கலந்து கொண்டதன் மூலம்!
வாகனங்களைத் தானே ஓட்டுவதிலும், ஏன் சொந்தமாக இரயிலை ஓட்டுவதற்கும்கூட ஆர்வம் காட்டும் ஜோகூர் சுல்தான், தைப்பூசத் திருவிழாவுக்குத் தனது காரைத் தானே ஓட்டி வந்தார்.
திருவிழாவுக்கு வந்திறங்கிய அவருக்கு அங்கு திரண்டிருந்த இந்துப் பெருமக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்தனர்.
ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரில் உள்ள ஆலயத்திற்கு வருகை தர சுல்தான் ஒப்புக் கொண்டது, தனது அனைத்துத் தரப்பு மக்களையும் சரிசமமாக, பாரபட்சமின்றிப் பார்க்கும் அவரது அணுகுமுறைக்கு சான்றாக அமைந்தது.
ஆலயத்திற்கு வருகை தந்த சுல்தானுக்கு வரவேற்பு வளையங்கள் வைக்கப்பட்டிருந்ததோடு, ஆலய நிர்வாகத்தினரும் அவருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகளையும், மரியாதையையும் நல்கினர்.
ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வித்தியானந்தன் சுல்தான் வருகையின்போது உடனிருந்தார்.
மக்களோடு மக்களாக அவர்களுடன் அளவளாவும் ஜோகூர் சுல்தான்…
மத புரிந்துணர்வு நமது நாட்டில் சற்றே மங்கியிருக்கும் நிலையில், ஜோகூர் சுல்தானின் நடவடிக்கை மற்ற சுல்தான்களுக்கும், மலாய்த் தலைவர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கின்றது.
சுல்தானை வரவேற்கும் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் குளுவாங் பிரமுகர் தென்னரசு, ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வித்தியானந்தன் ஆகியோர்….