கோலாலம்பூர் – பெட்டாலிங் ஜெயா அமர்வு நீதிமன்றத்தில் இன்று பாண்டான் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், பிகேஆர் உதவித் தலைவருமான ரபிசி ரம்லி மீது குற்றவியல் அவதூறு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்களின் மீது பெட்ரோல் குண்டு வீசியதற்குப் பின்னால் சிலாங்கூர் அம்னோ இருப்பதாகக் கூறியிருப்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாக நிரூபணம் ஆகியுள்ளதால், அவர் மீதான இந்தக் குற்றம் நிரூபிக்கப்படுகின்றது என அமர்வு நீதிமன்ற நீதிபதி அஸ்வர்னிடா ஆரிபின் தெரிவித்துள்ளார்.
ரபிசி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருப்பதால், அவரது அபராதத்தை 2,000 ரிங்கிட்டிற்கும் குறைவான அளவில் விதிக்க, ரபிசியின் வழக்கறிஞர் எரிக் பால்சன் விடுத்த கோரிக்கையை தற்போது நீதிமன்றம் பரிசீலனை செய்து வருகின்றது.
மலேசிய சட்டத்தின் படி, நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர், தான் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனையோ அல்லது 2,000 ரிங்கிட்டிற்குக் கூடுதலாகவோ அபராதம் செலுத்த நேரிட்டால், அவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்தை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.