பெய்ஜிங் – உலகின் மிகப் பெரிய ரேடியோ டெலஸ்கோப்பை உருவாக்கியுள்ள சீனா, அது அமைக்கப்பட்டுள்ள பகுதியைச் சுற்றி வாழ்ந்துவந்த சுமார் 10,000 மக்களை வேறு இடத்திற்கு மாற்றியுள்ளது.
இந்த ரேடியோ டெலஸ்கோப்பைப் பயன்படுத்தி வேற்றுக்கிரக மனிதர்கள் பற்றிய ஆராய்ச்சியை சீனா மேற்கொள்ளவுள்ளது.
குய்சவ்வின் தென்மேற்குப் பகுதியில் உள்ள மலைகளுக்கு நடுவே, இந்த 500 மீட்டர் நுண்துளை கோள வானொலி தொலைநோக்கியை (Aperture Spherical Radio Telescope) அமைத்துள்ளது சீனா.இந்த ஆண்டே அத்தொலைநோக்கி செயல்பட ஆரம்பிக்கவுள்ளது.
இதனால், அதன் அருகே 5 கிலோமீட்டர் சுற்றுவட்டாரத்தில் வசித்துவந்த 9,110 குடும்பங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளது.
இதனால் அப்பகுதி முழுவதும் ‘ஒலி மின்காந்த அலை சுற்றுச்சூழலாக’ மாறும் என்று அவ்வட்டார தலைமை அதிகாரி லி யூசெங் தெரிவித்துள்ளார்.
இந்த இடையூறுக்காக அந்தக் குடும்பங்களுக்கு மாதம் 1,800 டாலரும், வீட்டு வசதிகளையும் செய்து தரவுள்ளது சீன அரசு.
வேற்றுக்கிரகவாசிகளைக் கண்டறிவதற்கு இவ்வளவு செலவு செய்வதற்குப் பதிலாக, ஏழைகளின் பொருளாதார நெருக்கடிகளைப் போக்கலாம் என்று இப்போதே இத்திட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பத் தொடங்கியுள்ளன.