Home Featured நாடு “கட்டுமானத் துறைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைதான்! ஆனால் ஒரு நாட்டிலிருந்து மட்டுமல்ல!” – ஏ.கே.நாதன் கூறுகிறார்!

“கட்டுமானத் துறைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவைதான்! ஆனால் ஒரு நாட்டிலிருந்து மட்டுமல்ல!” – ஏ.கே.நாதன் கூறுகிறார்!

1058
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் கட்டுமானத் துறைக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மிகவும் அவசியம்தான், அவர்கள் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்தவர்களாகவோ, ஓர் இனத்தினராகவோ மட்டும் இருக்க வேண்டியதில்லை என மாஸ்டர் பில்டர்ஸ் அசோசியேஷன் எனப்படும் கட்டுமானத் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பாக அதன் உதவித் தலைவர் டான்ஸ்ரீ ஏ.கே.நாதன் (படம்) கூறியுள்ளார்.

AK_Nathanகட்டுமானத் துறையில் உள்நாட்டில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் முன்னணி நிறுவனமாக மலேசிய இந்தியரான நாதனின் எவெர்செண்டாய் நிறுவனம் திகழ்கிறது.

“உள்நாட்டு தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற துணைப் பிரதமர் அகமட் சாஹிடியின் அறைகூவலை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், பெரும்பாலான உள்நாட்டுத் தொழிலாளர்கள் கட்டுமானத் துறையில் வேலை செய்வதைத் தவிர்க்கின்றனர்” என்றும் நாதன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனவே, இதுபோன்ற தொழில்களுக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அவசியம்தான். ஆனால், அத்தனை தொழிலாளர்களும், வங்காள தேசத்தை மட்டும் சேர்ந்தவர்களாக இருப்பது உசிதமல்ல. இதனால் பல்வேறு பிரச்சனைகளும், சமூகப் பிரச்சனைகளும் ஏற்படும்” என்றும் நாதன் எச்சரித்துள்ளார்.

வங்காளதேச தொழிலாளர்களை நாட்டுக்குள் கொண்டு வருவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றது என துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சாஹிட் ஹாமிடி விடுத்திருந்த அறிவிப்பு தொடர்பாக, கருத்துரைக்கும்போதே, நாதன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அதே வேளையில் நாட்டில் தற்போது அதிகாரபூர்வ வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாக இருக்கின்றது என்றும், சட்டவிரோதத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 1.7 மில்லியனாக இருக்கின்றது என்றும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் 1.5 மில்லியன் வங்காளதேச தொழிலாளர்கள் என்பது மலேசியாவுக்கு மட்டுமல்ல, மொத்தம் 139 நாடுகள் அந்தத் தொழிலாளர்களைப் பகிர்ந்து கொள்ளும் என மனிதவள அமைச்சர் ரிச்சர்ட் ரியோட் அறிவித்திருக்கின்றார்.