Home Featured நாடு 1.5 மில்லியன் தொழிலாளர்கள் என்ற கணக்கு தவறா? அமைச்சர்களின் அறிவிப்பில் முரண்பாடு!

1.5 மில்லியன் தொழிலாளர்கள் என்ற கணக்கு தவறா? அமைச்சர்களின் அறிவிப்பில் முரண்பாடு!

898
0
SHARE
Ad

Zahid Richardகோலாலம்பூர் – 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு கொண்டு வருவது தொடர்பான தகவலை துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அறிவித்த நாள் தொடங்கி தொடர்ந்து அவ்விவகாரத்தில் பல முன்னுக்குப் பின் முரணான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதில் எல்லாவற்றையும் விட உச்சக்கட்டமாக, ஆசியான் கருத்தரங்கிற்காக அமெரிக்க சென்றிருந்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், கடந்த வியாழக்கிழமை, சான் பிரான்சிஸ்கோவில் இருந்து வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த விவகாரம் குறித்து நாடு திரும்பியவுடன் சாஹிட் ஹமீடியுடன் கலந்தாலோசிப்பதாகத் தெரிவித்திருந்தார் என்று ‘த ஸ்டார்’ குறிப்பிட்டிருந்தது.

najib3ஆனால், அன்றைய நாளே, ஜி2ஜி ஒப்பந்தம் தொடர்பாக வங்கதேசம் சென்றிருந்த மலேசிய மனிதவள அமைச்சர் ரிச்சர்டு ரியாட், வங்கதேசத்துடனான ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டதாக ‘டெய்லி ஸ்டார்’ பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

#TamilSchoolmychoice

அப்படியானால், இந்த விவகாரத்தில் சாஹிட்டுடன் பேசுவதாக நஜிப் அளித்த வாக்குறுதி என்னவானது? என்று மலேசியர்கள் மத்தியில் அப்போதே கேள்விகள் எழத் தொடங்கின.

இதனிடையே, நேற்று சாஹிட் ஹமீடி, வங்கதேசம் உட்பட வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்களை மலேசியாவில் வேலைக்கு அழைத்து வருவது தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றது என்று அறிவித்தார்.

ஆனால், நேற்றைய தினமே, வங்கதேச புலம்பெயர்ந்தோர் அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலேசிய அரசாங்கத்தின் இந்த முடிவு வெறும் கண்துடைப்பு தான் என்று கூறியுள்ளார்.

1.5 மில்லியன் தொழிலாளர்கள் என்பது தவறு – ரிச்சர்டு

இதனிடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த மனிதவள அமைச்சர் ரிச்சர்டு ரியாட், மொத்தம் 1.5 மில்லியன் வங்கதேசத் தொழிலாளர்களை அழைத்து வருவதாக சாஹிட் கூறியிருப்பது தவறு என்று தெரிவித்துள்ளார்.

வங்கதேச புலம்பெயர்ந்தோர் அமைச்சில் மலேசிய வேலைக்காக பதிவு செய்திருப்போரின் எண்ணிக்கை தான் மொத்தம் 1.5 மில்லியன் என்று கூறும் ரிச்சர்டு, ஜி2ஜி ஒப்பந்தத்தில் மொத்தம் எத்தனை தொழிலாளர்கள் என்ற கணக்கே இல்லை என்று புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் இதற்கு முன் இந்தோனேசியா, மியன்மார் உள்ளிட்ட நாடுகளுடன் மலேசியா செய்து கொண்ட ஒப்பந்தம் போன்றது தான் என்றும் ரிச்சர்டு கூறியுள்ளார்.

இந்த 1.5 மில்லியன் தொழிலாளர்கள் என்ற கணக்கை அறிவித்ததே துணைப்பிரதமர் தானே? என்று செய்தியாளர்கள் கேட்க, “ஆமாம் அது அவர் தான் அறிவித்தார். ஆனால் நான் எனது பதிலில் உறுதியாக இருக்கின்றேன். 1.5 மில்லியன் தொழிலாளர்கள் என்பது மொத்தமாக வேலைக்காக பதிவு செய்துள்ளவர்களின் கணக்கு” என்று ரிச்சர்டு தெரிவித்துள்ளதாக மலேசியாகினி கூறியுள்ளது.

பின் ஏன் அப்படி ஒரு கருத்து பரவ அனுமதித்தீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்குப் பதிலளித்துள்ள ரிச்சர்டு, “அதற்கு தான் சொல்கிறேன். நான் தான் மனிதவள அமைச்சர். எதையும் நான் அறிவிப்பது தான் சரியாக இருக்கும்”

“அதற்காக தான் ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை நான் செய்தியாளர்கள் சந்திக்கவில்லை. இப்போது சொல்கிறேன் அது வதந்தி அல்லது கேள்விப்பட்ட விசயமாக இருக்கும். அதை துணைப்பிரதமரே அறிவித்திருந்தாலும் அப்படித் தான்” என்று ரிச்சர்டு தெரிவித்துள்ளதாக மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் மூலம், இந்த விவகாரத்தில் பிரதமரான நஜிப், துணைப்பிரதமரான சாஹிட், மனிதவள அமைச்சரான ரிச்சர்டு ரியாட் மூவரும் ஒருவருக்கொருவர் கலந்தாலோசிக்காமலேயே அறிக்கைகளை அறிவித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.

தொகுப்பு: செல்லியல்