கோலாலம்பூர்- மலேசிய அரசு சர்வாதிகார ஆட்சியை நடத்தவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக தனது அரசு நாடாளுமன்ற ஜனநாயக முறையை பெரிதும் மதித்து அதைக் கடைபிடிப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
வடகொரியாவைப் போன்று மலேசியாவும் சர்வாதிகார ஆட்சி முறையை நோக்கி நடைபோடுவதாக கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கருத்து தெரிவித்திருந்தார்.
செய்தி இணையதளமான ‘த மலேசியன் இன்சைடர்’ ஊடகத்தை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் தடை செய்துள்ளது. இது குறித்து கருத்துரைக்கும்போதே சர்வாதிகாரம் குறித்து துன் மகாதீர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மகாதீரின் இக்கருத்து குறித்து பிரதமர் நஜிப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“நாங்கள் சர்வாதிகார ஆட்சி நடத்தவில்லை. நாடாளுமன்ற ஜனநாயக நடைமுறையை பெரிதும் மதித்து கடைபிடிக்கிறோம். அதை முழுமையாகப் பின்பற்றுகிறோம். இந்த அரசாங்கம் கவிழப் போவதாக சிலர் கூறுகிறார்கள். ஆனால் அவர்களின் கூற்று தவறு.
மலேசியா, அரசியல் நிலைத்தன்மையுடன் இருக்க வேண்டியது மிக அவசியம். தேசிய முன்னணி அதை உறுதி செய்யும். கடந்த சில ஆண்டுகளில் மலேசிய அரசின் நிர்வாகம் குறித்து அனைத்துலக நிதி அமைப்புகள் பலவும் பாராட்டு தெரிவித்துள்ளன. நாட்டில் நல்ல ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு இதுவே சாட்சி” என்றும் நஜிப் கூறினார்.
“அனைத்துலக தர நிர்ணைய முகைமைகளும் மலேசியா குறித்து நல்லவிதமாகவே கருத்துரைத்துள்ளன. எனவே நாட்டை சரியாக வழிநடத்தவில்லை என யாரேனும் கூறினால், அதன் பின்னணியில் ஏதேனும் அரசியல் காரணம் இருக்கும். அண்மையில் அரசாங்கத்தின் வரவு செலவு அறிக்கை உள்ளிட்ட பல விஷயங்கள் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகம் இருப்பதையே இது பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் நஜிப் மேலும் தெரிவித்துள்ளார்.