Home Featured கலையுலகம் திரைவிமர்சனம்: போக்கிரி ராஜா – படத்தில் கொட்டாவியும், சிபிராஜும் மட்டுமே சுவாரஸ்யம்!

திரைவிமர்சனம்: போக்கிரி ராஜா – படத்தில் கொட்டாவியும், சிபிராஜும் மட்டுமே சுவாரஸ்யம்!

725
0
SHARE
Ad

pokkiri-raja-teaserகோலாலம்பூர் – திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் ‘கொட்டாவி’ விட்டு தூங்கிவிடக் கூடாது என்ற கவலை தான் எல்லா இயக்குநருக்கும் இருக்கும். ஆனால் ‘போக்கிரி ராஜா’ படத்தின் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா சற்று வித்தியாசமானவர். அந்த கொட்டாவியையே படத்தில் முக்கிய அங்கமாக வைத்து ரசிகர்களை சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார்.

கதைப்படி, கதாநாயகன் ஜீவாவிற்கு அரைமணி நேரத்திற்கு ஒரு முறை கொட்டாவி விடும் வியாதி. இதனால் அவரது வேலை பாதிக்கப்படுகின்றது. அவர் வேலைக்கு சேரும் நிறுவனங்களில் எல்லாம் அவரது வியாதி பற்றி தெரியவந்ததும் வேலையை விட்டு அனுப்பிவிடுகின்றனர்.

இதனிடையே, ஹீரோயின் ஹன்சிகாவை சந்திக்கிறார். இருவருக்கும் காதல் மலர்கின்றது. ஒரு கட்டத்தில் ஹீரோயினுக்கு உதவி செய்யப் போய் அந்த ஊரின் மிகப் பெரிய ரவுடியான கூலிங்கிளாஸ் குணாவின் (சிபிராஜ்) பகையையும் தேடிக் கொள்கிறார்.

#TamilSchoolmychoice

பழி வாங்கத் துடிக்கும் சிபியிடமிருந்து ஜீவா எப்படி தப்பிக்கிறார்? என்பது தான் படத்தின் கிளைமாக்ஸ்.

நடிப்பு

Jiiva, Hansika Motwani, Sibiraj @ Pokkiri Raja Movie Team Meet Stills

கடைசியாக ஜீவாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பை ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் பார்த்தது. அதற்கு அடுத்ததாக ‘யான்’ படத்தில் அவரது கதாப்பாத்திரம் பேசப்பட்டாலும் கூட படம் பெரிய அளவில் ஈர்க்கவில்லை.

அடுத்ததாக, ஹீரோயிசம் இல்லாமல் முழுமுழுக்க நகைச்சுவையை நம்பியிருக்கும் ‘போக்கிரி ராஜா’ படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஜீவா. இப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தை தேர்வு செய்ய முதலில் ஒரு துணிச்சல் வேண்டும். அந்த வகையில் ஜீவாவை பாராட்டலாம்.

ஹன்சிகா மோத்வானி.. உடல் எடை குறைத்து சிக்கென்று இருக்கிறார். படத்தில் ஹீரோவுடன் காதல் செய்வதோடு, பொதுசேவை செய்வது போலும் அவருக்கு காட்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. நடிப்பு, கவர்ச்சி என அவரது கதாப்பாத்திரம் ஓரளவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

Jiiva-Hansika-Pokkiri-Raja-Movie-Stills-2யோகி பாபு.. பன்னி மூஞ்சி வாயா என்ற வார்த்தை மறைந்து மெல்ல ஹீரோவின் நண்பராக முன்னேற்றம் கண்டிருக்கிறார். அதிலும் இந்தப் படத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார். நகைச்சுவையில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்.

இவர்களையெல்லாம் விட வில்லத்தனத்திலும், நகைச்சுவையிலும் கலந்து கட்டி அடிப்பது சிபிராஜ் தான். இளம் வயது சத்தியராஜை மீண்டும் ஒரு முறை பார்த்தது போல் இருந்தது. நகைச்சுவையில் அவருக்கு பக்கபலம் சேர்த்திருக்கிறார் முனீஸ்காந்த். சிபிராஜ் கூட்டத்தில் ‘முட்டக்கண்ணா’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் புதிய நடிகர் ஒருவர் நகைச்சுவையில் அனைவரையும் கவர்கிறார்.

சொதப்பல்களும், சுவாரஸ்யங்களும்.. 

ஹன்சிகா மொடா குடிகாரி என்று ஜீவா நினைத்துக் கொண்டு பேசுவதும், அது தெரியாத ஹன்சிகா, “ஆமாம் .. தினமும் தண்ணியடிப்பேன்” என்று அப்பாவியாக விளக்கமளிப்பதும்.. அப்பப்பா.. படத்தின் தொடக்கத்திலேயே உப்புசப்பில்லாத மொக்கை காமெடிகளையும், இரட்டை அர்த்த வசனங்களையும் வைத்து நகர்த்தியிருக்கிறார் இயக்குநர்.

ஜீவாவின் கொட்டாவி பிரச்சனை பற்றி மருத்துவர்கள் ஆலோசிக்கும் போது தான், இருக்கையில் தளர்ந்து இருக்கும் நாம் சற்று நிமிர்ந்து உட்கார முடிகின்றது. இடையில் ரசனையே இல்லாத இரண்டு குத்துப்பாடல் வேறு.

jiva-story_647_122115080026அவ்வப்போது சிபிராஜின் வந்து போகும் காட்சிகள் தான் ஓரளவு நம்மை தொடர்ந்து இருக்க வைக்கின்றது. அதற்கு இடைப்பட்ட காட்சிகளில் ஜவ்வாக நகர்கிறது திரைக்கதை.

இரண்டாம் பாதி முழுவதையும் சிபிராஜ் ஆக்கிரமித்துக் கொள்கிறார். அதோடு, ஜீவாவின் கொட்டாவி பிரச்சனையில் திடீரென ஒரு பிளாஷ்பேக் வைத்து சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குநர். கொட்டாவிக்கான காரணத்தை மருத்துவ ரீதியாக சொல்லுவார்கள் என்று பார்த்தால், அதை பரம்பரை சக்தி என்று சொல்கிறார்கள்.

இந்த சக்தி உனக்கு ஒரு காரணத்தோட தான் வந்திருக்கும் என்று கூறி ஒரு பெரிய அணு குண்டுக்கான திரியைக் கொளுத்தி, கடைசியில் அதையும் புஷ்…. வானமாக்கிவிட்டார்கள். எதையோ சொல்ல நினைத்து, மாறாக எதை எதையோ சொல்லி, கடைசியில் படத்தை ஒன்றுமே இல்லாமல் முடித்திருக்கிறார் இயக்குநர்.

சிபிராஜ் தனது அடியாட்களை அடித்து உதைக்கும் காட்சியும், இறுதியாக கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியிலும் தான் நம்மை மறந்து சிரிக்க முடிகின்றது. டாம் & ஜெர்ரி பார்த்த ஒரு உணர்வு.

இப்படியாக ஒருவழியாக, ஆங்காங்கே இடம்பெறும் சில சுவாரஸ்யங்களின் கோர்வையால் மட்டுமே ஓரளவு படத்தை பார்க்க முடிகின்றது.

ஒளிப்பதிவு, இசை

ஆஞ்சி ஒளிப்பதிவில் கதைக்கு ஏற்றவாறு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகளில் கேமரா கோணங்கள் ரசிக்க வைக்கின்றது.

இமான் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். சிபிராஜ் காட்சிகளுக்கு வரும் பின்னணி இசை மட்டும் ரசிக்கும் படியாக சிறப்பாக வந்துள்ளது.

மொத்தத்தில், போக்கிரி ராஜா – ஜவ்வாக இழுக்கும் திரைக்கதையில், கொட்டாவியும், சிபிராஜுன் தான் சுவாரஸ்யம்!

– ஃபீனிக்ஸ்தாசன்