Home Featured உலகம் அமெரிக்கா-தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்க 6 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா!

அமெரிக்கா-தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்க 6 ஏவுகணைகளை ஏவியது வடகொரியா!

867
0
SHARE
Ad

mission_2761991fவடகொரியா – அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் கொரிய தீபகற்ப கடல் பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா நேற்று ஏவியது. அவை கடலில் விழுந்து வெடித்துச் சிதறின.

கடந்த 2006-ஆம் ஆண்டில் வடகொரியா அணுகுண்டு சோதனையை நடத்தியதால் அந்த நாட்டின் மீது ஐ.நா.சபை பொருளாதாரத் தடைகளை விதித்தது. கடந்த ஜனவரி 6-ஆம் தேதி சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையை வடகொரியா நடத்தியது.

இதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியது.

#TamilSchoolmychoice

ஹைட்ரஜன் குண்டு, ஏவுகணை சோதனைகளுக்கு அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உட்பட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வடகொரியாவின் நட்பு நாடுகளான சீனாவும் ரஷ்யாவும் கூட அதிருப்தி வெளியிட்டன.

இதைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு ஆணையத்தில் நேற்று முன்தினம் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

மொத்தம் 15 உறுப்பினர்கள் கொண்ட பாதுகாப்பு ஆணையத்தில் வடகொரியாவுக்கு பொருளாதாரத் தடைகளை விதிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அதன்படி உணவு, மருந்து பொருட்களைத் தவிர்த்து அந்த நாட்டுக்கு வேறு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானம் நிறை வேற்றப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில் கொரிய தீபகற்ப பகுதியில் 6 ஏவுகணைகளை வடகொரியா அடுத்தடுத்து ஏவியது.

குறைந்த தொலைவு பாயும் திறன் கொண்ட அந்த ஏவுகணைகள் கடலில் விழுந்து வெடித்துச் சிதறின. அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் வடகொரியா இந்த ஏவுகணைகளை கடலில் வீசியிருப்பதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் எழுந்துள்ளது. முன்னதாக பொருளாதார தடை குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியபோது, உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து வட கொரியாவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளன.

வடகொரிய அரசு உடனடியாக அணுஆயுதங்களைக் கைவிட வேண்டும், இல்லையெனில் அந்த நாடு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.