கோலாலம்பூர் – தமிழ்ப் பட உலகை ஆட்டிப் படைக்கும் “சென்டிமெண்ட்” எனப்படும் சில விஷயங்களில் நம்பிக்கை வைக்கும் போக்கை முறியடிக்கும் வண்ணம், “பிச்சைக்காரன்” என்ற பெயருடனேயே படத்தை வெளியிட்டிருக்கும் விஜய் ஆண்டனிக்கு முதலில் பாராட்டு தெரிவிக்க வேண்டும்.
வேறு எந்தப் பெயரும் இந்தப் படத்திற்கு இந்த அளவுக்குப் பொருத்தமாக இருந்திருக்குமா என்பதும் சந்தேகம்தான்!
அதே வேளையில், படத்தின் தலைப்புக்கும், படத்தில் இழையோடும் அதன் மையக் கருவுக்கும் வஞ்சகம் செய்யாமல் அற்புதமாக திரைக்கதையை அமைத்திருக்கும் இயக்குநர் சசியும் பாராட்டு பெறுகின்றார்.
கதை-திரைக்கதை
பெரிய செல்வந்தனான அருள் (விஜய் ஆண்டனி) வெளிநாட்டிலிருந்து திரும்பி தனது தாயாரின் மேற்பார்வையில் இருக்கும் பரந்த தொழிலை தானே முன்வந்து எடுத்துக் கொள்ளும் நேரத்தில் ஒரு விபத்தில் சிக்கி அவனது தாயார், “கோமா” (முற்றிலும் மயக்கநிலை) நிலைக்கு ஆளாகின்றார்.
பணக்காரனான நீ 48 நாட்கள்-ஒரு மண்டலம் – யாரிடமும் சொல்லாமல் பிச்சைக்காரனாக வாழ்ந்து வரமுடியுமா – அப்படிச் செய்தால் உன் தாயார் உயிர் பிழைக்கக் கூடும் என சவால் விடுகின்றார் சாமியார் ஒருவர். காலையில் கையில் ஒன்றுமில்லாமல் பிச்சைக்காரனாக வாழ்க்கையைத் தொடங்கி, மாலையில் எஞ்சிய பணத்தை கோயில் உண்டியலில் சேர்ப்பித்து, கையில் ஒன்றுமில்லாதவனாக வாழ்க்கையை முடிக்க வேண்டும் எனவும் கட்டளையிடுகின்றார் சாமியார்.
அதன்படி, தனது தாயார் உடல் நலத்துக்காக, பிச்சைக்காரனாக மாறும் விஜய் ஆண்டனி சந்திக்கும் சோதனைகள், சவால்கள், பிரச்சனைகள்தான் படம். இடையில், தமிழ் மெட்ரிமோனி வழி காதல், கடத்தல் கும்பல் வில்லன்களின் அட்டகாசம், தனது சொத்தை அடைய வில்லத்தனமாக சிந்திக்கும் பணத்தாசை பிடித்த பெரியப்பா என அனைத்தையும் சரியான சரி விகிதத்தில் கலந்து “பிச்சைக்காரனை” பிசைந்தெடுத்திருக்கின்றார் சசி
படத்தின் பலம் விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி
படத்திற்கு பாந்தமாகப் பொருந்திப் போகின்றார் ஆண்டனி. பணக்காரனாகக் காட்டும் கம்பீரம், பிச்சைக்காரனாக கஷ்டப்படுவது, அசல் பிச்சனைக்காரனாக மாறுவது என அந்தக் கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கின்றார்.
ஆனால், படம் முழுக்க ஏறத்தாழ ஒரே அலைவரிசையில் எல்லா வசனங்களையும் ஒப்பிப்பதுபோல் ஆண்டனி பேசுவதைத்தான் சகித்துக் கொள்ள முடியவில்லை.
அவருக்கு ஜோடியாக வரும் கதாநாயகி சாத்னா டைட்டஸ்- சரியாகப் பொருந்திப் போகவில்லை. நினைவில் நிற்க முடியாத முகம். நடிப்பும் சுமார்தான்.
இறுதிவரை, சொல்ல வந்த விஷயத்திலிருந்து விலகாது திரைக்கதை அமைத்திருப்பது ஒரு சிறப்பு. கதையின் இடையிலேயே வரும் பிச்சைக்காரக் கதாப் பாத்திரங்களை வைத்தே நகைச்சுவைத் தோரணங்கள் கட்டியிருக்கின்றார்கள். முகம் தெரியாத அந்தப் பிச்சைக்காரர்களும் நன்றாகவே நம்மை சிரிக்க வைத்திருக்கின்றார்கள்.
பாலாவின் “நான் கடவுள்” படத்தில் பிச்சைக்காரர்கள் சந்திக்கும் கொடூரங்களைக் குரூரமாகக் காட்டியது போல் அல்லாமல், சின்னச் சின்ன சம்பவங்களின் மூலம் அவர்களின் உலகத்திற்குள் நம்மை அழைத்துச் சென்று, சில இடங்களில் சிரிப்பையும், சில இடங்களில் அவர்கள் மீது அனுதாபத்தையும் வரவழைத்திருக்கின்றார் சசி (படம்).
அதே போல, படத்தில் வரும் சின்னச் சின்ன கதாபாத்திரங்களின் குணநலன்களும், சுவாரசியமாக கதையோடு காட்டப்படுகின்றன. ஆண்டனியின் வில்லத்தனமான சித்தப்பாவின் பணத்தாசை, அவரது டிரைவராக வருபவர் அடிவாங்குவது, ஆண்டனியின் செயலாளராக வரும் “நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்” பக்ஸ் பகவதி பெருமாள், வில்லன்களுக்கு இடையில் இருக்கும் பழிவாங்கல் உணர்வுகள், பிச்சைக்காரர்களிடையே இருக்கும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளும் குணநலன்கள் – இப்படியாக பல விஷயங்களை இரசிக்கக் கூடிய சம்பவங்களாகச் சிந்தித்து நுணுக்கமாக படத்திற்குள் நுழைத்திருக்கின்றார், சசி.
படத்தின் பலவீனங்கள்
படத்தைத் தயாரிப்பதிலும், கதாநாயகனாக நடிப்பதிலும் காட்டிய அக்கறையை ஆண்டனி, ஏனோ, பின்னணி இசையிலும், பாடல்களிலும் காட்டவில்லை. எந்தப் பாடலும் நினைவில் நிற்கவில்லை.
தமிழில் மறக்க முடியாத பாடல்களைத் தந்திருக்கும் விஜய் ஆண்டனி தனது சொந்தப் படத்தில் ஒரு பாடலைக் கூட நினைவில் நிற்கும்படி தரவில்லை.
படத்தின் மற்றொரு பலவீனம் அடிக்கடி வரும் சண்டைக்காட்சிகள். பணக்காரனாக இருப்பவர், வெளிநாட்டில் எம்பிஏ படித்தவர், பார்ப்பதற்கு அவ்வளவு சாதுவாக இருப்பவர், நடுரோட்டிலும், பாழடைந்த மண்டபங்களிலும், லோக்கல் ரவுடிகளுடன் சரிசமமாக சண்டை போடுவது கொஞ்சம் அதிகப்படியான ஹீரோயிசமாகப் படுகின்றது.
ஓரிரு சண்டைக் காட்சிகளைத் தவிர்த்திருக்கலாம்.
அதேபோல், பிச்சைக்காரனாக வரும் ஆண்டனி மாலை வேளைகளில் பீட்சா தயாரித்துக் கொடுத்து, மற்ற ஊழியர்களுக்குப் பயிற்சி கொடுத்து, வாடிக்கையாளர்களை உயர்த்துவதும் நம்பும்படியாக இருந்தாலும், கொஞ்சம் அதிகப்படியான சிந்தனையாகவே படுகின்றது.
இது போன்ற சில குறைகளை மட்டும் ஒதுக்கித் தள்ளிவிட்டுப் பார்த்தால், சசியின் திரைக்கதை-இயக்கம், விஜய் ஆண்டனியின் நடிப்பு, நகைச்சுவைத் தோரணங்கள் ஆகிய காரணங்களுக்காக, “பிச்சைக்காரன்” பார்த்து ரசிக்க வேண்டியவனாகவே இருக்கின்றான்.
-இரா.முத்தரசன்