Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘காளி’ – சிறப்பான நடிப்பு, ரசிக்க வைக்கும் திரைக்கதை!

திரைவிமர்சனம்: ‘காளி’ – சிறப்பான நடிப்பு, ரசிக்க வைக்கும் திரைக்கதை!

1540
0
SHARE
Ad

சென்னை – அமெரிக்காவில் புகழ்பெற்ற பரத் மருத்துவமனை உரிமையாளரின் ஒரே வாரிசான விஜய் ஆண்டனிக்கு அடிக்கடி தூக்கத்தில் ஒரு கனவு வந்து தொந்தரவு செய்கின்றது. அக்கனவில் ஒரு பாம்பும், காளைமாடும், ஒரு சிறுவனும்,  ஒரு பெண்ணும் வந்து செல்கின்றனர்.

அவர்கள் யார்? அவர்களுக்கும் தனக்கும் என்ன தொடர்பு? என விஜய் ஆண்டனி தினமும் குழம்பிக் கொண்டிருக்கையில், தான் ஒரு தத்துப்பிள்ளை என்பது தெரிய வருகின்றது.

இதனால், தனது தாய் தந்தையைத் தேடி இந்தியா வருகின்றார் விஜய் ஆண்டனி. சென்னையில் தான் வளர்ந்த அனாதை ஆசிரமத்தில் கிடைக்கும் ஆதாரங்களின் மூலம், தனது தாய் வாழ்ந்த கிராமத்திற்குச் சென்று அங்கு மருத்துவமனை ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் தனது பெற்றோரைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் விஜய் ஆண்டனி.

#TamilSchoolmychoice

அம்முயற்சியில் பல தோல்விகளைச் சந்திக்கிறார். என்றாலும் இறுதியில் விஜய் ஆண்டனி தனது பெற்றோரைக் கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் சுவாரசியம்.

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ‘காளியாக’ விஜய் ஆண்டனி தனது வழக்கமான பாணியில் சிறப்பாக நடித்திருக்கிறார். மருத்துவர் கதாப்பாத்திரம் விஜய் ஆண்டனிக்கு கச்சிதமாகவே பொருந்தியிருக்கிறது.

அதேவேளையில், வித்தியாசமான மூன்று தோற்றங்களில் தனது உடல்மொழிகளை மாற்றி ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் ஆண்டனி.

கதாநாயகியாக அஞ்சலி.. கிராமத்தில் நாட்டு வைத்தியராக வருகின்றார். அவரது கதாப்பாத்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் இல்லை.

அதேவேளையில் மற்ற கதாநாயகிகளாக வரும் சுனைனா, அமிர்தா ஐயர், ஷில்பா மஞ்சநாத் ஆகியோரது கதாப்பாத்திரங்கள் மனதில் நிற்கும் படியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும், காமெடிக்கு யோகி பாபு, பாதிரியாராக ஜெயப்பிரகாஷ், கிராமத்து நாட்டாமையாக மதுசூதனன் ராவ், வில்லனாக வேல ராமமூர்த்தி, திருடனாக நாசர் என தெரிந்த முகங்கள் பலரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

திரைக்கதையைப் பொறுத்தவரையில் சற்று புதுமையைக் கையாண்டிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. அதுவே படத்திற்குப் பக்கபலம் சேர்த்திருக்கிறது.

படம் தொடங்கி சற்று நேரத்தில், “என்னய்யா இது விஜய் ஆண்டனிக்கு வேற கதையே கிடைக்கலையா?” என யோசிக்கும் போது, மெல்ல படத்தில் இடையிடையே வரும் குட்டிக் குட்டிக் காதல் கதைகள் நமது எண்ணத்தைத் தவிடு பொடியாக்கிவிடுகின்றன. அங்கு தான் திரைக்கதை வேகமெடுத்து ரசிகர்களுக்கு சுவாரசியத்தைக் கூட்டுகின்றது.

குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சிக்கு முன் வரும் பிளாஷ்பேக்கும், அதில் விஜய் ஆண்டனியின் நடிப்பும் அழகு. ஒரு காலத்தில் தமிழகத்தில் தலைவிரித்தாடிய சாதிக் கொடுமையையும், தீண்டாமையின் கொடூரத்தையும் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார் இயக்குநர்.

அதேவேளையில், வயதானவர்களுக்கு இளம் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் கொடூரத்தையும், கள்ளக்காதல் ஏற்படுவதற்கான காரணத்தையும் தெளிவாக விவரித்திருக்கிறார்.

ரிச்சர்டு எம்.நாதன் ஒளிப்பதிவில் கிராமத்துக் காட்சிகள் மிக அழகு. அதேவேளையில் விஜய் ஆண்டனியின் இசையில் பின்னணி இசையும், பாடல்களும் மனதில் நிற்கும் இரகம். குறிப்பாக ‘அரும்பே அரும்பே’ பாடல் திரையரங்கை விட்டு வெளியே வந்தாலும் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

மொத்தத்தில், ‘காளி’ – குடும்பத்தோடு திரையரங்கு சென்று ரசித்துவிட்டு வருவதற்கு ஒரு நல்ல திரைப்படமாக அமைந்திருக்கிறது..

-ஃபீனிக்ஸ்தாசன்