Home கலை உலகம் திரைவிமர்சனம்: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து மிரட்டும் “கொலைகாரன்”

திரைவிமர்சனம்: விஜய் ஆண்டனியும் அர்ஜூனும் இணைந்து மிரட்டும் “கொலைகாரன்”

1155
0
SHARE
Ad

தமிழ் திரையுலகம் சென்டிமெண்ட் காரணமாக வைக்கவே தயங்கும் எதிர்மறையான படத் தலைப்புகளோடு, கதையையும், உள்ளடக்கத்தையும் மட்டுமே நம்பி வரிசையாக சாதித்து வருபவர் விஜய் ஆண்டனி. ‘கொலைகாரன்’ படத்தின் மூலம் இன்னொரு முறை வெற்றி பெற்றிருக்கிறார். இந்த முறை அவருக்குக் கைகொடுத்திருப்பது போலீஸ் அதிகாரி கார்த்திகேயன் வேடத்தில் அர்ஜூன்.

முழுக்க முழுக்க போலீஸ் அதிகாரி ஒருவர் மர்மக் கொலைகளை துப்புத் துலக்கும் படம். எந்தவித மசாலாவும் கலக்காமல், நேரடியாக விறுவிறுப்பாக கதையைச் சொல்லியிருக்கிறார்கள். நிறைய இடங்களில் கதாபாத்திரங்கள் குறிப்பாக போலீஸ்காரர்கள் பேசிக் கொண்டே இருந்தாலும், போரடிக்கவில்லை. கொலையின் மர்மத்தைப் பற்றிப் பேசுவதால் சுவாரசியமாகவே இருக்கிறது.

கணக்குப் பார்த்தால், விஜய் ஆண்டனியை விட அர்ஜூனுக்கு காட்சிகள் அதிகம் இருக்கும் போலும். அந்த அளவுக்கு ‘ஈகோ’ பார்க்காமல் அர்ஜூனுக்கு விட்டு கொடுத்து நடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி. படத்தின் வெற்றிக்கும் அதுவே காரணமாக அமைகிறது.

கதையும் – திரைக்கதையும்

#TamilSchoolmychoice

முதலில் ஒரு கொலையோடு தொடங்கும் படத்தில் அடுக்கடுக்கான கொலைகள் இல்லை. மொத்தம் நடப்பது மூன்றே கொலைகள்தான். அதிலும் நடப்புக் கதையில் இரண்டே கொலைகள்தான். முதல் கொலை ‘பிளாஷ்பேக்’ கொலையாக – முன்பு நடந்த கொலையாக – காட்டப்படுகிறது.

ஓர் ஆணின் சடலம் கிடைக்க, அந்தக் கொலையைச் செய்தது யார் எனப் போலீஸ் அதிகாரி அர்ஜூன் துப்புத் துலக்கத் தொடங்க, நான்தான் செய்தேன் என விஜய் அந்தோணி சரணடைகிறார்.

அவரது பின்புலம் என்ன, ஏன் அந்தக் கொலையைச் செய்தார் எனக் கதை விரிகிறது. எனினும் பிரபாகரனாக வரும் விஜய் ஆண்டனியின் சில ஒப்புதல் வாக்குமூலங்களை அர்ஜூன் நம்ப மறுக்கிறார். அர்ஜூனுக்கு ஆலோசனைகள் கூறி உதவி செய்வது ஓய்வு பெற்ற முன்னாள் காவல் துறையின் உயர் அதிகாரி நாசர். இருவரும் இருவித கோணங்களில் சிந்தித்து கொலையின் பின்னணியை விவாதிப்பது படத்தின் சுவாரசியத்தைக் கூட்டுகிறது.

இறுதியில் அர்ஜூன் படம் பார்ப்பவர்களுக்காக மட்டும், தான் கண்டுபிடித்த கொலைக்கான உண்மையான மர்மங்களை இறுதியில் அவிழ்க்கிறார்.

படத்தின் மற்ற அம்சங்கள்

இரண்டு பாடல்கள் என்பதைத் தவிர, நகைச்சுவையோ, மற்ற வழக்கமான மசாலாக் கலவைகளோ இல்லை. விறுவிறுவென்று கதை சொல்லியிருப்பதால் மொத்த படமுமே  ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

கொலைகளைத் துப்பறியும் போலீஸ் அதிகாரிகளின் பார்வைக் கோணத்திலும், கொலைகாரனின் கோணத்திலும் கதையைக் கொண்டு போயிருப்பதால் நல்ல சினிமா அனுபவத்தைக் கொடுக்கிறது இந்தப் படம்.

படத்திற்கு துணை நிற்கும் மற்றொரு அம்சம் பின்னணி இசை. பாடல்கள் சுமார் என்றாலும், பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் புதியவரான சைமன் கே.கிங். படத்தின் விறுவிறுப்பை அதிரடி இசை அதிகரிக்கச் செய்கிறது.

கதாநாயகி, அஷிமா நர்வால் இரசிக்க முடியவில்லை. காதல் காட்சிகளில் மட்டும் விஜய் ஆண்டனியோடு நெருக்கம் காட்டுகிறார்.

இயக்குநர் அண்ட்ரூ லூயிஸ் மிகச் சில கதாபாத்திரங்களோடு, கதைக்குள் புதைந்திருக்கும்  மர்மங்களை குழப்பமில்லாமல் முடிச்சுகளை அவிழ்த்து பாராட்டு பெறுகிறார்.

தமிழில் ஒரு நல்ல மர்மப் படத்தைப் பார்த்த திருப்தி! முடிந்தால் தவற விடாதீர்கள்!

-இரா.முத்தரசன்