கோலாலம்பூர் – இந்த மாத இறுதியில் அம்னோ உச்சமன்றம் கூடும்போது, டான்ஸ்ரீ மொகிதின் யாசின், டத்தோஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் இருவரும் அம்னோவிலிருந்து நீக்கப்படுவதற்கு தான் முன்மொழியப் போவதாக சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் கூறியுள்ளார்.
“இனியும், நஜிப்பின் தலைமைத்துவத்திற்கு எதிராக அந்த இருவரும் தொடுத்து வரும் தாக்குதல்களைப் பொறுத்துக் கொள்ள முடியாது. மகாதீர் ஏற்பாட்டில் நடைபெற்ற பிரதமரைப் பதவியிலிருந்து நீக்கும் பொதுமக்கள் பிரகடனத்தில் கையெழுத்திட்டிருப்பதன் மூலம் நஜிப்பை அவர்கள் இருவரும் அவமதித்துள்ளனர். அவர்களை நீக்கும் நடவடிக்கைகளை நான் முன்மொழிந்து தொடக்கி வைப்பேன்” என்றும் நஸ்ரி கூறியுள்ளார்.
நஸ்ரி அம்னோ உச்சமன்ற உறுப்பினருமாவார். இவர்களை விசாரிக்க தனியாக அம்னோ ஒழுங்கு நடவடிக்கைக் குழு எதுவும் தேவையில்லை என்றும், அம்னோ உச்சமன்றமே நேரடியாக இவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கலாம் என்றும் நஸ்ரி தெரிவித்தார்.
“அவசரக் கூட்டம் என்பதும் தேவையில்லை. நாங்கள் அவசரப்படத் தேவையில்லை. முறையான நடைமுறைகளைப் பின்பற்றுவோம்” என்றும் நஸ்ரி மேலும் கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற கையெழுத்துப் பிரகடனத்தில் அம்னோ உதவித் தலைவர் ஷாபி அப்டால் கலந்து கொள்ளாததால், தற்போதைக்கு அவர் மீது நடவடிக்கை எதுவும் தேவையில்லை என்றும் நஸ்ரி கூறினார்.