சென்னை – கடந்த வாரம் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் போக்கிரி ராஜா, சவுகார்பேட்டை படங்களை ஓரங்கட்டி தொடர்ந்து வசூலைக் குவித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை போக்கிரி ராஜா, சவுகார்பேட்டை மற்றும் பிச்சைக்காரன் ஆகிய 3 படங்கள் வெளியாகின.
இதில் போக்கிரி ராஜா, சவுகார்பேட்டை படங்களுக்கு திரைக்கதை பெரிதும் கைகொடுக்கவில்லை. அதே நேரம் பிச்சைக்காரன் என்ற தலைப்பைக் கண்டு அஞ்சாமல் படத்தை தைரியமாக வெளியிட்ட விஜய் ஆண்டனிக்கு, இப்படம் இதுவரை 27 கோடி வசூலைக் கொடுத்திருக்கிறது.
அம்மாவுக்காக பிச்சைக்காரனாக மாறும் பணக்காரன், என்ற ஒருவரிக் கதையை சசி கையாண்ட விதம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து விட்டது. விளைவு முதல் 3 நாட்களில் சுமார் 4.25 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு அரசின் 30% வரிவிலக்கும் இப்படத்திற்கு கிடைத்துள்ளது. அதே நேரம் பிச்சைக்காரன் படத்துடன் வெளியான போக்கிரி ராஜா 3 கோடிகளை மட்டுமே முதல் வாரத்தில் வசூல் செய்திருக்கிறது.
ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா என்று நட்சத்திரப் பட்டாளத்துடன் களமிறங்கிய போக்கிரி ராஜா, வசூலில் பிச்சைக்காரனை முந்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நான், சலீம், என்ற வெற்றியில் பிச்சைக்காரன் படமும் இணைந்துள்ளது.