உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
அவ்வாறு அகதிகளாக செல்பவர்கள் முதலில் துருக்கியை அடைந்து அங்கிருந்து கிரீஸ் சென்று பின்னர் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
துருக்கியில் இருந்து கிரீஸ் செல்ல அவர்கள் கடல் மார்க்கமான பயணத்தை மட்டுமே மேற்கொள்ளும் நிலை உள்ளது. மேலும் மரப்படகுகள் மற்றும் ரப்பர் படகுகள் போன்றவற்றில் அதிகமான பயணிகளை ஏற்றி செல்வதால் பல நேரங்களில் நடுக்கடலில் படகு பழுதாகி விபத்துகள் ஏற்படுகிறது.
இந்நிலையில்,துருக்கியில் இருந்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஏற்றி கிரீஸூக்குச் சென்று கொண்டிருந்த படகு ஒன்று துருக்கி நாட்டில் உள்ள டிடிம் நகரின் அருகேயுள்ள ஏய்ஜியன் கடற்பகுதியில் நேற்று கவிழ்ந்தது.
இதில் 58 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். தகவல் அறிந்து விரைந்து வந்த துருக்கி கடலோர காவல்படையினர் நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த 15 பேரை உயிருடன் மீட்டனர்.
மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. மீட்பு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டு உள்ளது.