டெல்லி – பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புக்கு ஊழல் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.
டெல்லி, ஜெய்ப்பூர், உதய்ப்பூர் உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள சிண்டிகேட் வங்கி கிளைகள் மற்றும் வங்கி அதிகாரிகள் வீடுகள் உள்ளிட்ட 10 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
இத்தகவலை சிபிஐ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், போலி ரசீதுகளை பயன்படுத்தி இல்லாத ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மீது மிகைப்பற்று வழங்குவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்றிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து வங்கித் தரப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. சிண்டிகேட் வங்கிகளில் சி.பி.ஐ. சோதனை நடத்திய அதேசமயம், வங்கி பங்குகளின் மதிப்பு 2 சதவீதம் சரிவடைந்தது குறிப்பிடத்தக்கது.