ஹனோய் – வியட்னாமில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். முதல் குழந்தை பிறந்த சில நிமிட இடைவெளியில் இரண்டாவது குழந்தையும் பிறந்துள்ளது.
இரட்டைக் குழந்தைகள் பிறந்து இரண்டு ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையில், அக்குடும்பத்தில் திடீரென குழப்பம் உருவாகியுள்ளது.
காரணம், அந்த இரண்டு குழந்தைகளும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல் வெவ்வேறு முகச்சாடையில் இருந்துள்ளது. ஒரு குழந்தைக்கு அடர்த்தியான சுருள் தலைமுடியும், மற்றொரு குழந்தை மெல்லிய நேரான தலைமுடியையும் கொண்டுள்ளது.
அதனால், சந்தேகமடைந்த உறவினர்கள் அப்பெண்ணின் கணவரை கேள்விகளால் துளைத்தெடுத்துவிட்டனர். மரபணு பரிசோதனை செய்து பார்க்கும் படியும் ஆலோசனை கூறியுள்ளனர்.
அதன்படி, அண்மையில் அத்தம்பதிக்கும், குழந்தைகளுக்கும் மரபணுப் பரிசோதனை செய்து பார்த்த போது, மருத்துவர்களே வியப்பில் ஆழ்ந்துவிட்டனர். காரணம் ஒரே தாய் வயிற்றில் பிறந்த அந்த இரு குழந்தைகளுக்கும் வெவ்வேறு தந்தைகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அதில் ஒரு குழந்தை தான் அப்பெண்ணின் கணவருக்குப் பிறந்துள்ளது என்றும் மருத்துவர்கள் மரபணுப் பரிசோதனை முடிவுகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அந்தப் பெண் தனது கருமுட்டை வெளியாகும் காலத்தில், இரு வெவ்வேறு ஆண்களுடன் உடலுறவு கொண்டிருக்கலாம் என்றும், அதனால் இரு ஆண்களின் விந்தணுக்களும் கருவில் சேர்ந்து வளர்ச்சியடைந்திருக்கலாம் என்றும் வியட்னாம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது போன்று நடப்பது வியட்னாமில் மட்டுமல்ல உலகத்திற்கு புதிது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளதாக வியட்னாம் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கு முன்பு இப்படி ஒரு வினோத சம்பவம், கடந்த ஆண்டு அமெரிக்காவில் பதிவானது குறிப்பிடத்தக்கது.