கோலாலம்பூர் – சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் தனது இல்லம் மீதான விசாரணையைத் துரிதப்படுத்தும் படி பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவரது உதவியாளர் வாங் ஹான் வாய் இன்று வெளியிட்ட அறிக்கையில், “லிம் கடந்த 2015-ம் ஆண்டு வாங்கிய இல்லம் குறித்து எம்ஏசிசி நடத்தவிருக்கும் விசாரணை குறித்து விளக்கமளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டேன். எம்ஏசிசி விசாரணை நடத்துவதாக இருந்தால், லிம் அந்த இல்லத்தை 2009-ம் ஆண்டு வாடகைக்கு எடுத்ததிலிருந்து துவங்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எம்ஏசிசி நடத்தவிருக்கும் விசாரணையை வரவேற்பதாகவும், அப்போது தான் அவரது நேர்மையான நிர்வாகம் தெரியவரும் என்றும் வோங் தெரிவித்துள்ளார்.
கடந்த 2009 -ம் ஆண்டு முதல் வாடகைக்கு எடுத்திருந்த அந்த இல்லத்தை லிம் கடந்த 2015-ம் ஆண்டு 2.8 மில்லியன் ரிங்கிட் கொடுத்து சொந்தமாக விலைக்கு வாங்கினார். ஆனால் அவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதை மிகக் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.
இதனிடையே, லிம் நேற்று பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்து அந்த வீட்டை சுற்றிக் காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.