புதுடெல்லி – பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லைய்யா நாடெங்கும் உள்ள 17 வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து விட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது.
வங்கிகளின் கூட்டமைப்பு அவர் மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக சிபிஐ அவர் மீதும், அவரது நிறுவனங்கள் மீதும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் மல்லைய்யா இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜராக வருமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் இந்தியா வர இது உகந்த நேரமல்ல என்று கூறி அவர் மறுத்து விட்டார். இதையடுத்து அவரது சொத்துக்களை ஏலம் விட்டு பணத்தை பெறும் முயற்சிகளில் வங்கிகள் ஈடுபட்டுள்ளன.
சமீபத்தில் மும்பையில் உள்ள அவரது கிங்பிஷர் இல்லம் ஏலம் விடப்பட்டது. ஏலத்தொகை அதிகமாக இருந்ததால் விஜய் மல்லையாவின் வீடு விற்கப்படவில்லை. இதற்கிடையே விஜய் மல்லையாவின் சிறிய ரக சொகுசு விமானத்தை சேவை வரித்துறையினர் முடக்கி வைத்துள்ளனர்.
25 இருக்கைகள் கொண்ட அந்த குட்டி விமானத்தை ஏலம் விட சேவை வரித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். தற்போது அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே மாதம் 12 அல்லது 13–ஆம் தேதிகளில் அந்த விமானம் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த குட்டி விமானத்தை ஏலம் மூலம் பெற விரும்புவர்கள், முதலில் அதை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏப்ரல் 2–ஆம் தேதி முதல் மே மாதம் 10–ஆம் தேதி வரை விமானத்தை பார்க்க அனுமதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மல்லைய்யா இந்த குட்டி விமானத்தை தனக்காக பிரத்யேகமாக தயார் செய்தார். மிகுந்த உள்வேலைபாடுகள் கொண்ட அந்த விமானம் 70 மில்லியன் டாலர் விலை மதிப்புடையது.
இந்த குட்டி விமானம் தவிர விஜய் மல்லையாவின் மற்றொரு பிரத்யேக விமானம், 5 பெரிய விமானங்கள் மற்றும் இரு ஹெலிகாப்டர்களையும் சேவை வரித்துறை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.