துன் மகாதீரோடு இந்த வீதிப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சமூகப் போராட்டவாதி அம்பிகா சீனிவாசன் தங்களுக்குக் கிடைத்து வரும் ஆதரவு தங்களுக்கே வியப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய மகாதீர், நஜிப்புக்கு வழங்கப்பட்ட நன்கொடை தொடர்பில் தனது கேள்விகளையும் குற்றச்சாட்டுகளையும் அடுக்கினார்.
“அவ்வளவு பணம் யாரிடம் உள்ளது? எங்களிடம் காட்டுங்கள். எந்த வங்கியில் இந்தப் பணம் சேமித்து வைக்கப்பட்டிருந்தது? எந்த வர்த்தகத்தில் ஈடுபட்டதால் இத்தனை பெரிய இலாபம் கிடைத்து அதன் மூலம் நஜிப்புக்கு 681 மில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை கொடுக்க முடிந்தது?” என மகாதீர் அடுக்கடுக்காக வினா தொடுத்தார்.
“நாட்டை அழிக்கப் பார்க்கின்றார் நஜிப். அவரை பதவியில் இருந்து இறக்க வேண்டும்” எனக் கூறிய மகாதீர் மக்கள் நஜிப்பை அகற்றும் பிரகடனத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அஸ்மின் அலி உரை
“இது எங்களின் தனிப்பட்ட குரோதமோ, பழிக்குப் பழி வாங்கும் எண்ணமோ கிடையாது. மலேசியாவைக் காதலிக்கும் மலேசியர்களாகிய எங்களுக்கு மலேசியாவைக் காப்பாற்றும் பொறுப்புணர்வு இருக்கின்றது. பொறுத்தது போதும். இனி இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவோம். நீங்கள் தயாரா?” என பலத்த கரவொலிக்கிடையில் அஸ்மின் முழங்கினார்.
–