ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள புலி மகமூத்கான் பகுதியில் அலுவலகங்கள் நிறைந்துள்ளன. அமெரிக்க தூதரகமும் இதன் அருகே அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று காலை வெடிகுண்டு நிரப்பிய கார் ஒன்று வேகமாக வந்து வெடித்து சிதறியது.
இதனால் பொதுமக்கள் அலறிஅடித்து ஓடினர். இந்த தாக்குதல் காரணமாக பல கி.மீ.தூரம் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதில் குண்டுகள் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டு 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்களில் 48 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பயங்கர தற்கொலை படை தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இது தொடர்பாக ஆப்கன் சுகாதாரத்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில், ‘‘தற்கொலைப் படை தாக்குதலில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.
ஆப்கன் அதிபர் கனி, இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் ஆப்கனின் பாதுகாப்பை பலவீனப்படுத்தாது என்றும் தீவிரவாதத்தை எதிர்த்து ஆப்கான் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து போராடுவார்கள் எனவும் அவர் கூறினார்.