சென்னை – முதல்வர் ஜெயலலிதாவை இழிவான, அருவருக்கத்தக்க சொற்களால் தமிழக காங்கிரஸ் குழுத் தலைவர் இளங்கோவன் விமர்சித்திருப்பது, சகிக்க முடியாதது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய இளங்கோவன், ஜெயலலிதாவை விமர்சித்து பேசினார். அவரது இந்த பேச்சைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டங்களை நடத்தி, இளங்கோவனின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வைகோ செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை, யானை உருவத்தோடு ஒப்பிட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசியுள்ளார். அவரின் இந்த பேச்சு சகிக்க முடியாத, அருவறுக்கத்தக்க, இழிவான சொற்களாகும்.
இதற்கு முன்னரே இளங்கோவன் பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்த போது, இரட்டை அர்த்தத்தை கூறுவது போல் பேசினார். இதனை கண்டித்து அ.தி.மு.க.வினர் அவரது உருவ பொம்மையை எரித்தனர்.
மேலும் உருவபொம்மை எரிப்பது போல, இளங்கோவனையும் எரிப்போம் என்றனர். இதனை தொலைக்காட்சியில் கண்ட நான், இளங்கோவனின் இல்லம் தாக்கப்படலாம் என்று உணர்ந்து 100 பேருடன் இளங்கோவன் வீட்டின் பாதுகாப்புக்கு சென்றேன்.
ஆனால் அந்த சமயத்தில், அவர் ஜெயலலிதா குறித்து கீழ்தரமாக பேசிய பேச்சு என்னவென்று எனக்கு தெரியாது. அந்த இழிவான பேச்சினை தெரிந்து கொண்ட பின்னர், இளங்கோவனின் வீட்டுக்கு சென்றது தவறு என்று புரிந்துகொண்டேன்.
தற்போது, திருவாரூரில் கருணாநிதி முன்னிலையிலேயே காங்கிரஸ் கட்சி தலைவர் இளங்கோவன் முதல்வர் ஜெயலலிதாவை தரக்குறைவாக பேசியதை கருணாநிதி கண்டிக்காதது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஜெயலலிதாவை இழிவான சொற்களால் பேசிய இளங்கோவன், மன்னிப்புக் கேட்க வேண்டும் என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.