புத்ராஜெயா – கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை நாடெங்கிலும் உள்ள மருத்துவமனைகளில் 730 பாம்பு கடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக, மலேசியாவின் வடக்கு மாநிலங்களில் தான் அதிகளவு பாம்பு கடிச் சம்பவங்கள் நடந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
கெடாவில் 195 சம்பவங்களும், பேராவில் 107 சம்பவங்களும் கடந்த நான்கு மாதங்களில் பதிவாகியுள்ளது.
என்றாலும், பாம்பு கடித்து அது இறப்புச் சம்பவமாகப் பதிவாகியிருப்பது, அண்மையில் கிளந்தானில் 7 வயது பள்ளி மாணவியைப் பாம்பு கடித்த சம்பவம் மட்டும் தான் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், “தட்பவெட்ப நிலை மாற்றங்களின் காரணமாக பாம்புகள் இயல்பாகவே அதன் இருப்பிடங்களை விட்டு வெளியேறுவது வழக்கம். எனவே நாம் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை பாம்பு கடித்தால், உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா அறிவுறுத்தியுள்ளார்.
மாறாக, கடிபட்ட இடத்திலிருந்து விசத்தை உறிஞ்சி இழுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், பள்ளிகளில் அல்லது உள்ளூர் மருத்துவ மையங்களில் விஷமுறிவு மருத்துகள் வைத்து சிகிச்சை அளிக்கும் திட்டம் இல்லை என்றும், காரணம் அது போன்ற சிகிச்சைகள் மருத்துவமனைகளில் நிபுணர்களைக் கொண்டு முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்றும் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.
“தவறான முறையில் விஷமுறிவு சிகிச்சை அளிக்கப்பட்டால், அது பாம்பு கடியைக் காட்டிலும் மிகப் பெரிய அபாயம், அது மனித உடம்பில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்திவிடும்” என்று டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.