Home Featured நாடு “அரசியலுக்காக கொள்கை இழப்பவன் நான் அல்ல!” – டத்தோ டி.மோகன் விளக்கம்!

“அரசியலுக்காக கொள்கை இழப்பவன் நான் அல்ல!” – டத்தோ டி.மோகன் விளக்கம்!

633
0
SHARE
Ad

கோலாலம்பூர் –  “மஇகாவில் 3- தேசியத் தலைவர்களுடன் அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் வேலை செய்தவன் என்ற முறையிலும், இன்றைய மஇகாவின் உதவித்தலைவராகவும்,  3 நகர்களில் (கூலிம், சுங்கைப்பட்டாணி, ஈப்போ)  நடைபெற்ற கிளைத் தலைவர்களுடனான குழு சந்திப்பில் கட்சியின் வளர்ச்சி, சமுதாயத்தின் மேம்பாடு குறித்து  எனது கருத்தை பதிவு செய்தேன். ஒரு சிலர் நினைத்துக்கொண்டிருப்பது போல  டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களை  பாராட்ட வேண்டுமென்பதற்காக  முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு அவர்களை நான் விமர்சிக்கவில்லை. அதோடு அரசியலுக்காக கொள்கையை இழப்பவன் நான் இல்லை” என மஇகாவின் தேசிய உதவித்தலைவர்  டத்தோ டி.மோகன் விளக்கமளித்துள்ளார்.

Mohan T-Datuk-“நான் என்ன சொன்னேன்? எனது கருத்து என்ன?  என்பது தெரியாமல் சிலர் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மஇகாவில் நான் வேலை செய்த 3 தலைவர்களுக்கும் தனித்தனி பாணி உள்ளது. டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலு அவர்களை பொறுத்தவரையில் கட்சிக்காக தனிமனிதனாக இருந்து  கட்சிப்பணி ஆற்றி, கட்சியை வலுப்படுத்தினார். அன்றைய காலக்கட்டங்களில்  அவருடைய பாணி கட்சிக்கு சரியானதாக இருந்தது” என தான் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் டி.மோகன் தெரிவித்துள்ளார்.

“டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்களை பொறுத்தவரையில் கட்சிக்குள்  அவருடைய நிலைப்பாட்டில் அனைவரின் தலையீட்டையும் அனுமதித்து செயல்பட்டார். அவருடன் எனக்கு கருத்து வேறுபாடு இருந்த பொழுதிலும் அவரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யவில்லை. டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அவர்களைப் பொறுத்தவரையில் இன்றைய காலத்திற்கேற்பவும் கட்சியின் சூழலுக்கு ஏற்பவும் அனைவரும் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற சூழலை உருவாக்குகிறார். அனைவருக்கும் பொறுப்பு வழங்கி தனது கடமையை ஆற்றி வருகிறார்” என்றும் மோகன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“கிளை அளவில் தலைவர்களைச் சந்தித்து கட்சிக்குள் பலத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் ஒரு கிளையில் 20 நபர்களை  சந்தித்தால் 4000 கிளைகளில் 80,000 பேரை நாம் சந்திக்க முடியும். அதே நேரத்தில் புதிதாக உறுப்பினர்களை சேர்க்கும் பட்சத்தில் இன்னும் அதிகமான ஆதரவை திரட்டலாம்   என்ற நிலையிலும் இந்த குழு சந்திப்பு இன்றைய தலைமைத்துவத்தில்  நடைபெறுகிறது. இன்றைய கட்சியின் சூழலுக்கு நாம் அனைவரும் இணைந்து கட்சிப் பணியாற்றி மஇகா-வை பலப்படுத்த வேண்டுமென்று எனது உரைகளில் வலியுறுத்தி வந்தேன்” என்றும் மோகன் விளக்கியுள்ளார்.

“என்னைப்பொறுத்த வரையில் யாரையும் சாடி அரசியல் செய்யவில்லை. கருத்து வேறுபாடுகள் இருப்பின் அந்த கருத்து வேறுபாடுகள் சார்ந்து எனது கருத்துக்களை முன்வைத்துள்ளேனே தவிர தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்ததில்லை. கட்சியின் வளர்ச்சிக்காகவும், சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன்.  ஆனால் நான் விமர்சனம் செய்யாத ஒன்றை தவறாக புரிந்துகொண்டு என்னை விமர்சிக்க  சம்பந்தமில்லதாவரின் முகத்தை போட்டிருப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது” என்ற மோகன்,

“மேலும் மஇகாவில் நான் கிளை, தொகுதி அளவில் போட்டியிட்டு வெற்றி பெற்று பதவிக்கு வந்திருக்கிறேன். இளைஞர் பகுதி ஆட்சிக்குழு உறுப்பினர் தொடங்கி மத்திய செயலவை உறுப்பினராக, இளைஞர் பகுதி தலைவராக, உதவித்தலைவராக போட்டியிட்டே வென்றுள்ளேன். 2008-இல் இளைஞர் பகுதி ஒருங்கிணைப்பாளராக என்னை  முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு நியமித்தார். பொதுத்தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பளித்தார் அதனை நான் மறுக்கவோ, மறக்கவோ இல்லை அதே நேரத்தில் எல்லா காலக்கட்டங்களிலும் துணிந்து என் மனதில் உள்ள கருத்தை வெளிப்படுத்துவேன். என்னைப்பொறுத்த வரையில் அரசியலுக்கு அப்பாற்பட்டு குடும்ப உறவாக டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலு அவர்கள் குடும்பத்திற்கு இருந்து வருகிறேன். ஆகவே குழப்பம் அடைந்தவர்கள் குறிப்பாக அந்த ஒருவர் என்னை தொடர்பு கொண்டு தெளிவடையலாம் அதனை விடுத்து ஒரு கேவலமான அரசியல் செய்ய வேண்டாம்” என டத்தோ டி.மோகன் தமதறிக்கையில் தெரிவித்துள்ளார்.