கோலாலம்பூர் – தன்னுடைய அரசியல் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்று தனது தந்தை மகாதீர் நினைத்திருந்தால், அதை அவர் பிரதமராகப் பதவி வகித்த காலத்திலேயே செய்திருக்கலாமே? மாறாக ஓய்வுக்குப் பிறகு 13 ஆண்டுகள் கழித்து இப்போது அதை அவர் செய்ய வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? என்று தன் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் முக்ரிஸ் மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பத்திரிகைச் செயலாளர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அகமட் கூறும் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் முன்னாள் கெடா மந்திரி பெசாரான முக்ரிஸ் மகாதீர் குறிப்பிட்டுள்ளார்.
“என்னை நியமனம் செய்ய வேண்டும் அல்லது என்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு உதவ வேண்டும் என்று மகாதீர் நினைத்திருந்தால், அதை 22 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பிரதமர், கட்சித் தலைவராக இருந்த போது செய்திருக்கலாம்.”
“அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இப்போது அவர் அதை செய்யும் நோக்கத்துடன் செயல்படுகின்றார் என்று கூறுவது முற்றிலும் அபத்தமானது. அவர் இந்த நாட்டின் மிக உயர்ந்த பதவியையும், கட்சியையும் விட்டு விலகி 13 ஆண்டுகள் ஆகிவிட்டது” என்று முக்ரிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முக்ரிசைப் பிரதமராக்கும் முயற்சியில் அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் மொகமட் செயல்பட்டு வருவதாகவும், முக்ரிஸ் பதவிக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார் என்றும் பிரதமரின் பத்திரிகை செயலாளர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அகமட் வெளியிட்ட 4 பத்திரிகை அறிக்கைகள் குற்றம் சாட்டுவதாகக் கூறப்படுகின்றது.
அதனால், நேற்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெங்கு ஷரிபுடினுக்கு எதிராக முக்ரிஸ் அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.